அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தீர்மான நகலை கிழித்து எரிந்ததால் பரபரப்பு
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தீர்மான நகலை கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றிய குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத்தலைவர் சுமத்ரா தேவி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் கிருஷ்ணகுமார் தீர்மானங்களை வாசித்தார். அப்போது எழுந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பத்மா, சிரும்பாயி ஆகியோர் தங்களது ஊராட்சி பகுதிக்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.
அப்போது குறுக்கிட்ட ஒன்றியக்குழுத்தலைவர், உங்கள் வார்டில் என்னன்ன பணிகள் செய்ய வேண்டும் என கடிதம் எழுதிக் கொடுங்கள், அடுத்த கூட்டத்தில் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போன கூட்டத்திலேயே இந்த பதிலை தான் சொன்னீர்கள், உங்கள் பதிலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக்கூறி வெளி நடப்பு செய்தனர். பின்னர் அலுவலக நுழைவு வாயிலில் தீர்மான நகலை கிழித்து எரிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.