அ.தி.மு.க. நிர்வாகி பர்சை திருடிய முதியவர்
அ.தி.மு.க. நிர்வாகி பர்சை முதியவர் திருடினார்.
செம்பட்டு:
திருவெறும்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் சால்வை அளிக்க வந்தார். அப்போது அவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்சை முதியவர் ஒருவர் திருடினார்.
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள், அந்த முதியவரை பிடித்தனர். இதையடுத்து அவர் மறைத்து வைத்திருந்த பர்சை, அந்த நிர்வாகியிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்த நிர்வாகிகளை கையெடுத்து கும்பிட்டு, தன்னை மன்னித்து விடுங்கள் என கூறியபடி, அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.