அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம்தான்: தேர்தல் ஆணையத்திடம் வழங்கிய ஆவணங்கள் வங்கியில் ஒப்படைப்பு - தங்க கவசம் பெறும் உரிமை குறித்து அதிகாரிகளிடம் விளக்கம்
அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தான் என்று தேர்தல் ஆணையத்திடம் வழங்கி உள்ள ஆதாரங்களை வங்கியில் கொடுத்து, தங்க கவசத்திற்கான உரிமை குறித்து அதிகாரிகளிடம் வக்கீல்கள் விளக்கம் அளித்தனர்.
அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தான் என்று தேர்தல் ஆணையத்திடம் வழங்கி உள்ள ஆதாரங்களை வங்கியில் கொடுத்து, தங்க கவசத்திற்கான உரிமை குறித்து அதிகாரிகளிடம் வக்கீல்கள் விளக்கம் அளித்தனர்.
தங்கக்கவசம்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார். அந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தேவர்ஜெயந்தி விழாவின்போது வங்கியில் உள்ள தங்க கவசத்தை அ.தி.மு.க. கட்சியின் பொருளாளர் கையெழுத்து போட்டு அதனை எடுத்து கொடுப்பது வழக்கம். அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் பொருளாளர் என்ற முறையில் இந்த தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்கு உரிமை கோருவதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வங்கி நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வ கடிதத்தை வழங்கி இருந்தனர். அதுகுறித்து வங்கி நிர்வாகம் பரிசீலனை செய்வதாக தெரிவித்து இருந்தது.
உரிமை போராட்டம்
வங்கியில் இருந்து தங்க கவசம் பெறும் உரிமையை கைப்பற்றும் வகையில் நேற்று முன்தினம் தேவர் நினைவாலய பொறுப்பாளரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் எம்.பி. தர்மர், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், மருது அழகுராஜ், வக்கீல்கள் ராஜலட்சுமி, பிரகாஷ், பால்பாண்டியன் உள்ளிட்டோர் மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளைக்கு வந்தனர்.
அவர்கள் அதிகாரிகளிடம் ஓ.பன்னீர்செல்வம் தான் அ.தி.மு.க.வின் பொருளாளர் என்பதற்காக தேர்தல் ஆணையத்திடம் வழங்கிய ஆவணங்களை ஒப்படைத்து தங்க கவசம் பெற உரிமை கோரினர். எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தங்க கவசம் வழங்க ஆட்சேபனை தெரிவித்தனர்.
ஓ.பி.எஸ். தரப்பினர் விளக்கம்
பின்னர் மருது அழகுராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தங்க கவசத்தை ஓ.பன்னீர்செல்வம் பெறுவது குறித்து வங்கி நிர்வாகம் விளக்கம் கேட்டு எங்களை அழைத்து இருந்தனர். அதற்காக நேரில் வந்து எங்கள் தரப்பு விளக்கங்களை அளித்துள்ளோம். தேர்தல் ஆணையத்தில் வழங்கிய ஆவணங்களின்படி தற்போது வரை அ.தி.மு.க. பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் தான் உள்ளார் என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்து உள்ளோம். எடப்பாடி பழனிசாமி, தற்போது தங்க கவச விவகாரத்தில் அரசியல் செய்கிறார். எடப்பாடி பழனிசாமி இல்லாத அ.தி.மு.க. உருவாகும். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அதனால் தான் அவரிடம் பொருளாளர் பொறுப்பையும், தங்க கவசத்தை வடிவமைக்கும் பொறுப்பையும் அளித்து இருந்தார். ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி இணைய பேச்சுவார்த்தை குறித்து எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.