'அ.தி.மு.க. தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர்'-மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அ.தி.மு.க. தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அ.தி.மு.க. தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார்
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 23-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஒற்றை தீர்மானம் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருந்தார். ஆனால் இந்த தீர்மானத்திற்கும், அந்த பொதுக்குழு கூட்டத்திற்கும் தடை போட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்த ஐகோர்ட்டு, ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்ற கூடாது என்று தடை போட்டது. அதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். நேற்று சென்னை வந்த அவர் சொந்த ஊர் செல்வதற்காக மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது மாலைகள், சால்வைகள் அணிவித்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் பன்னீர்செல்வம் வாழ்க என்று கோஷம் எழுப்பினர்.
அசாதாரண சூழ்நிலை
பின்னர் விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் கடந்த 50 ஆண்டுகளாக மனிதநேயமிக்க இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருகிறது. தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கும் கட்சியாக இதுவரை செயல்பட்டு வந்துள்ளது. தற்போது கட்சியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது யாரால், எப்படி ஏற்பட்டுள்ளது? யாரால் இந்த சதிவலை பின்னப்பட்டது என்பது தொண்டர்களுக்கு தெரியும்.
அவர்கள் தவறு செய்தவர்களுக்கு உரிய பாடம் கற்பிப்பார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் உண்மையை அறிவார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் இப்போதும் என் பக்கம் உள்ளனர். நான் தொண்டர்களுக்காகவே தொடர்ந்து கட்சியில் இருந்து பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.