வருகிற 20-ந்தேதி நடக்கும் அ.தி.மு.க. மதுரை மாநாட்டுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்- அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவு
மதுரையில் வருகிற 20-ந்தேதி நடக்கும் அ.தி.மு.க. மாநாட்டுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரையில் வருகிற 20-ந்தேதி நடக்கும் அ.தி.மு.க. மாநாட்டுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அ.தி.மு.க. மாநாடு
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
அ.தி.மு.க. மாவட்ட செயலாளராகவும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும் உள்ளேன். நாட்டில் உள்ள பெரிய கட்சிகளில் அ.தி.மு.க.வும் ஒன்று. எங்கள் கட்சியில் 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுங்கட்சியாக அ.தி.மு.க. இருந்துள்ளது.
1972-ம் ஆண்டு அ.தி.மு.க. தொடங்கப்பட்டு தற்போது வரை பிரமாண்ட பொதுக்கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி, பொதுமக்கள் நலன், தொண்டர்களின் நலன், கட்சியின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் வருகிற 20-ந்தேதி மதுரை வலையங்குளம் பகுதியில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டை நடத்த உள்ளோம். இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வந்து பங்கேற்கின்றனர். இதற்காக சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அன்றைய தினம் இந்த மாநாடு, காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணி வரை நடக்கிறது.
போதுமான பாதுகாப்பு தேவை
இந்த மாநாட்டில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சர், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கட்சி வளர்ச்சி மற்றும் ஆளுங்கட்சியின் மக்கள் விரோத செயல்கள் குறித்து பேசுகிறார். இந்த மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு கேட்டு திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டுவிடம் மனு அளித்தோம். அதன்பேரில் 22 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினார். அதன்படி அ.தி.மு.க. மாநாட்டை நடத்த தயாராக இருக்கிறோம். ஆனாலும் எங்கள் கட்சிக்கு எதிரானவர்கள், இந்த மாநாட்டின் நோக்கத்தை சீர்குலைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வருகிற 20-ந்தேதி நடக்க உள்ள அ.தி.மு.க. மாநாட்டுக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
உறுதிப்படுத்துங்கள்
இந்த வழக்கு நீதிபதி நாகர்ஜூன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், வக்கீல்கள் தமிழ்செல்வம், பாரதிகண்ணன், மாரீஸ்குமார் உள்ளிட்டோர் ஆஜராகி, ஏராளமான பொருட்செலவில் நடக்கும் மிகப்பெரிய மாநாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என வாதாடினார்கள். அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, ஏற்கனவே மனுதாரர்கள் கட்சியின் மாநாட்டுக்கு உரிய நிபந்தனைகளுடன் பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் ஏற்படாத வகையில் மாநாட்டுக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.