கிருஷ்ணகிரியில், 'செல்பி' மோகத்தில் விபரீதம்:மலை உச்சியில் இருந்து தவறிவிழுந்த வாலிபர் படுகாயம்3½ மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்


கிருஷ்ணகிரியில், செல்பி மோகத்தில் விபரீதம்:மலை உச்சியில் இருந்து தவறிவிழுந்த வாலிபர் படுகாயம்3½ மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 'செல்பி' மோகத்தில் மலை உச்சியில் 30 அடி உயர பாறையில் ஏறி புகைப்படம் எடுக்க சென்ற வாலிபர் தவறிவிழுந்து படுகாயம் அடைந்தார். அவரை 3½ மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

'செல்பி' எடுக்க சென்றார்

உத்தரபிரதேச மாநிலம் சுந்தர்வால் பார்சேகிரி காலா பகுதியை சேர்ந்தவர் அமித்குமார் (வயது 25). இவர் கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் உள்ள மரக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலுக்கு சென்றார்.

பின்னர் கோவிலின் பின்புறம் உள்ள சுமார் 80 அடி உயர மலையில் ஏறினார். மலை உச்சியில் உள்ள சுமார் 30 அடி உயர பாறையில் ஏறிய அவர் அங்கிருந்து 'செல்பி' எடுக்க முயன்றார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் அவரது செல்போனும் உடைந்தது.

இந்த நிலையில் கோவிலுக்கு சென்ற அமித்குமார் நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால் அவரது நண்பர்கள் கோவிலுக்கு சென்று தேடினர். அவர்கள் மலை பகுதியில் தேடிய போது அமித்குமார் 30 அடி உயர பாறையில் இருந்து தவறிவிழுந்து செங்குத்தான மலை இடுக்கில் சிக்கி கிடப்பது தெரிய வந்தது.

தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

இது குறித்து அவரது நண்பர்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் வீரர்கள் சற்குணம், ராஜி, இளவரசன், மன்சூர் அகமத், அன்பு, நவீன்குமார் ஆகியோர் மலைக்கு விரைந்து சென்றனர்.

இதனிடையே நேற்று அதிகாலை 3 மணி அளவில் மீட்பு பணி தொடங்கியது. சுமார் 3½ மணி நேரம் போராடி காலை 6.30 மணி அளவில் மலையில் செங்குத்தான பகுதியில் விழுந்து கிடந்த அமித்குமாரை உயிருடன் மீட்டனர். தொடர்ந்து ஸ்ட்ரெக்சரில் அவரை கட்டி தீயணைப்பு வீரர்கள் மீட்டு கீழே கொண்டு வந்தனர்.

பரபரப்பு

பின்னர் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

'செல்பி' மோகத்தில் மலை உச்சியில் இருந்து தவறிவிழுந்த வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.


Next Story