வாலிபருக்கு கத்திக்குத்து:தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறைஈரோடு கோர்ட்டு தீர்ப்பு


வாலிபருக்கு கத்திக்குத்து:தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறைஈரோடு கோர்ட்டு தீர்ப்பு
x

வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது

ஈரோடு

வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கத்திக்குத்து

ஈரோடு மரப்பாலம் மேற்கு ஓடைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர். இவருடைய மகன் அருண்குமார் (28). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான தனபால் (49), அருண்குமாரை வழிமறித்து மதுகுடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தனபால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருண்குமாரை குத்தினார். இதில் அவருக்கு கை, தொடை உள்ளிட்ட இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அருண்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

3 ஆண்டு சிறை

இதுகுறித்த புகாரின்பேரில் ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாலை கைது செய்தனர். மேலும், தனபால் மீது ஈரோடு 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை மாஜிஸ்திரேட்டு அருண்குமார் விசாரித்து நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அதில் அவர், 'தொழிலாளி அருண்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக தனபாலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து,' உத்தரவிட்டு இருந்தார்.


Next Story