சாகச விளையாட்டு வசதிகள் விரைவில் தொடங்கப்படும்


சாகச விளையாட்டு வசதிகள் விரைவில் தொடங்கப்படும்
x

ஊட்டி படகு இல்லத்தில் சாகச சறுக்கு விளையாட்டு வசதிகள் விரைவில் தொடங்கப்படும் என்று சுற்றுலாத்துறை இயக்குனர் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி படகு இல்லத்தில் சாகச சறுக்கு விளையாட்டு வசதிகள் விரைவில் தொடங்கப்படும் என்று சுற்றுலாத்துறை இயக்குனர் தெரிவித்தார்.

படகு இல்லத்தில் ஆய்வு

தமிழக சுற்றுலாத்துறை நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்தூரி நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லத்தில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகையை மேலும் அதிகரிப்பது, புதிய சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த சுற்றுலா துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தார். தொடர்ந்து சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

ஊட்டி படகு இல்லத்தில் சாகச சறுக்கு (அட்வெஞ்சரஸ் டூரிசம்) விளையாட்டு வசதிகள் தொடங்கப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு இதற்கு ரூ.3½ கோடி நிதி ஒதுக்கி உள்ளது. மேலும் இதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.

சாகச விளையாட்டுகள்

இதன்படி ஊட்டி படகு இல்லத்தில் வயநாட்டில் இருப்பது போல கயிறுகளை கொண்ட பாலம் மூலம் 20 அடி உயரத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லலாம். மேலும் தேனிலவு படகு இல்லம் பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு குடிசை வீடுகள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை 3 மாதத்திற்குள் தொடங்கி, விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த பொங்கல் விடுமுறைக்கு சுற்றுலா பயணிகள் இங்கு சாகச சறுக்கு விளையாட்டுகள் விளையாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மண்டல மேலாளர் வெங்கடேசன், படகு இல்ல மேலாளர் சாம்சன் கனகராஜ், உதவி பொறியாளர் குணசேகரன் மற்றும் பலர் இருந்தனர். தொடர்ந்து சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆய்வு செய்தார்.


Next Story