கூத்தாண்டவர் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை
கூவாகத்தில் சித்திரைப்பெருவிழாவையொட்டி கூத்தாண்டவர் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைப்பெருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சிகளாக நாளை(திங்கட்கிழமை) மாலை கம்பம் நிறுத்துதல், 2-ந் தேதி இரவு சுவாமி திருக்கண் திறத்தல், திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்றுக்கொள்ளுதல், 3-ந் தேதி காலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, மாலை பந்தலடியில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த விழா முன்னேற்பாடு பணிகளின் நிலை குறித்து மாவட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) மணி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசியதாவது:-
முன்னேற்பாடு பணிகள்
சிறப்பு வாய்ந்த இத்திருவிழாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், திருநங்கைகள் கலந்து கொள்வார்கள். எனவே 40 இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டி, நடமாடும் குடிநீர் வாகனம், தற்காலிக கூடுதல் கழிவறைகள், குளியலறைகள் அமைக்க வேண்டும். தடையின்றி மின்சாரம் வழங்கவும், ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவிழாவின்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கு கூடுதலாக போலீசார் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மேலும் முக்கிய இடங்களில் உயர் கோபுரம் அமைத்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் கண்காணிக்க வேண்டும்.
சுகாதாரத்துறையும், தீயணைப்பு துறையும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாகரன், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரெத்தினமாலா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சரவணன், உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், உளுந்தூர்பேட்டை தாசில்தார் பழனி, உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், செல்வபோதகர், கூவாகம் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.