ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x

சிவகிரியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தென்காசி

சிவகிரி:

வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி கோவில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம், தெப்பத் திருவிழா அமைதியான முறையில் நடத்திட அனைத்து சமுதாய பிரமுகர்கள், பொதுமக்களுடன் ஆலோசனை கூட்டம் சிவகிரி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

சிவகிரி தாசில்தார் செல்வகுமார் தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், வருவாய் ஆய்வாளர் வள்ளியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் அன்பு செல்வி மற்றும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆனித்திருவிழா தேரோட்டம் வருகிற 11-ந் தேதி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பித்து, மாலை 4 மணிக்குள் தேர் நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும். எந்த விதமான சமூகத்தையும் குறிப்பிட்டு விளம்பர பலகைகளோ, சுவரொட்டிகளோ வைக்கக்கூடாது. சமுதாயத்தை வெளிப்படுத்தும் பனியன்கள், ரிப்பன்கள், கொடி மற்றும் துண்டு போன்றவை அணியக்கூடாது. கோவில் மேளம் தவிர வேறு மேளம் அனுமதிக்கப்படமாட்டாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்து மண்டகப்படித்தாரர்களும் சாமியை எடுத்து அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் சாமியை ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.


Next Story