மரக்காணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க தடையில்லா சான்று பெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடந்தது
மரக்காணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க தடையில்லா சான்று பெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடந்தது.
செஞ்சி,
ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அழகன்குப்பம் கடற்கரை கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தடையில்லா சான்று பெறுவது குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் செஞ்சி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கலெக்டர் மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீன்பிடி துறைமுகம்
விழுப்புரம் மாவட்டத்தில் 40 கிலோ மீட்டர் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் 19 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த மீனவ கிராமங்களில் 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதி மீனவர்கள் 1,500-க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் மேன்மைக்காக தமிழக அரசு கழுவேலி ஆற்று நீரை அடிப்படையாகக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் அலம்பறைகுப்பத்திலும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதிக்குட்பட்ட அழகன்குப்பத்திலும் மீன்பிடி துறைமுகம் ரூ.235 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. எவ்வித இயற்கைக்கும் இடையூறு ஏற்படாத வகையில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட உள்ளன.
வேலை வாய்ப்பு
இதன் மூலம் மீனவர்கள் ஆழ்கடல் சென்று மீன்பிடித்திடவும், பிடித்த மீன்களை எளிதில் தங்கள் இடத்திற்கு கொண்டு வரவும், மீன்கள் தேவைப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட வழிவகை ஏற்பட்டுள்ளது. இவற்றின் மூலம் மீனவர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படுத்தப்பட உள்ளது. மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் நிறுத்துமிடம், வலை கட்டுமிடம், வலை உலர்த்தும் இடம், படகுகள் பழுது நீக்குமிடம், நிர்வாக கட்டிடம், ஓய்வறை, குளிர்சாதன வசதியுடன் கூடிய மீன்கள் பதப்படுத்தும் இடம், கழிப்பறை வசதி, சாலை வசதி, பாதுகாப்பு அறை, சுற்றுச்சுவர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே இத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்திடும் வகையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தடையில்லா சான்று பெறுவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் நித்திய பிரியதர்ஷினி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல பொறியாளர் செல்வகுமார் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.