பட்டாசு தொழிலாளர்களுக்கான ஊதிய மறுநிர்ணய ஆலோசனை கூட்டம்
பட்டாசு தொழிலாளர்களுக்கான ஊதிய மறுநிர்ணய ஆலோசனை கூட்டம் 17-ந் தேதி சிவகாசியில் நடக்கிறது.
1948-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டம் பிரிவு 5-ன்படி பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க உரிய விசாரணை மேற்கொண்டு மாநில அரசுக்கு ஆலோசனை தெரிவிக்க அரசு உத்தரவுப்படி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை ஆலோசனை குழுவினை அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையரை தலைவராகவும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையரை (அமலாக்கம்) செயலாளராகவும் கொண்ட மேற்படி குழுவின் ஆலோசனை கூட்டம் வருகிற 17-ந் தேதியன்று சிவகாசி டான்பாமா திருமண மண்டபத்தில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் கருத்துக்கேட்பும், அதனை தொடர்ந்து பட்டாசு தொழிலாளர்களின் களப்பணியும் நடைபெற உள்ளது. பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய மறு நிர்ணயம் தொடர்பான கருத்துருக்களை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வழங்கலாம். இத்தகவலை தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.