வக்கீல் கொலை வழக்கு:கொலையாளிகளுக்கு உதவியமேலும் ஒரு வாலிபர் கைது
தூத்துக்குடி அருகே வக்கீல் கொலை வழக்கில், கொலையாளிகளுக்கு உதவிய மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்தவர் வக்கீல் முத்துக்குமார் (வயது 48). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டனர். 6 பேர் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளனர். மேலும் கொலை வழக்கில் கைதானவர்கள், கோர்ட்டில் சரண் அடைந்தவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலையாளிகளுக்கு உதவியவர்கள விவரம் சேகரிக்கப்பட்டு, அவர்களையும் போலீசார் வழக்கில் சேர்த்து கைது செய்து வருகின்றனர். அதன்படி மேலும் 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொலையாளிகளுக்கு பணம் கொடுத்து உதவியதாக, தேடப்பட்டு வந்த சிவத்தையாபுரத்தை சேர்ந்த சுதர்சன் (29) என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி ஜெயிலில் அடைத்தனர். இவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.