அறிவுரை குழுமத்தின் வழிகாட்டுதல்கள் குறித்து வக்கீல்கள் கருத்து தெரிவிக்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


அறிவுரை குழுமத்தின் வழிகாட்டுதல்கள் குறித்து  வக்கீல்கள் கருத்து தெரிவிக்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

அறிவுரை குழுமத்தின் வழிகாட்டுதல்கள் குறித்து வக்கீல்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை


அறிவுரை குழுமத்தின் வழிகாட்டுதல்கள் குறித்து வக்கீல்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

குண்டர் சட்டம் ரத்து

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கணேஷ்குமார் உள்ளிட்ட 3 பேர் ஒரு கொலை வழக்கில் கைதானவர்கள். இதில் கணேஷ்குமார் மற்றும் அவரது சகோதரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை எதிர்த்து அவர்கள் இருவரும் அறிவுரை குழுமத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் கணேஷ்குமாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஆனால் அவரது சகோதரர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கணேஷ்குமார் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

பரிசீலிக்கவில்லை

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- ஒரே வழக்கில் கைதான இருவரில் ஒருவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தும், மற்றொருவர் மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

அறிவுரை குழுமத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளிட்டோர் தான் உள்ளனர். போதுமான ஆவணங்கள் கொடுத்தும் அவற்றை அறிவுரை குழுமம் பரிசீலிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அறிவுரை குழுமம் பின்பற்ற வேண்டிய தெளிவான வழிகாட்டுதல்கள் குறித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் வரம்பிற்குள் தான் இருக்க வேண்டும் என்பதால் அறிவுரை குழுமத்தின் நடவடிக்கையை நீதித்துறை சார்ந்து மறுசீராய்வும் செய்ய வேண்டியுள்ளது.

கருத்து தெரிவிக்கலாம்

இதில் எந்தவொரு குடிமகனின் தனிப்பட்ட சுதந்திரமும் பாதிக்கப்படக்கூடாது. இது குறித்து விரிவாக விவாதித்து முடிவெடுக்க வசதியாக கோர்ட்டுக்கு உதவும் வகையில் வக்கீல்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பும் வக்கீல்களும் தங்களது கருத்தை தெரிவிக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 30- ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story