வைகை ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகள்
வைகை ஆற்றை ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்து உள்ளன. அவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை,
வைகை ஆற்றை ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்து உள்ளன. அவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வைகையை ஆக்கிரமித்த ஆகாய தாமரை
மதுரை வைகையாறு பல்வேறு வழிகளில் அசுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சாக்கடை கழிவுநீர் வைகை ஆற்றில் கலக்கிறது. ஆனால், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு வைகை ஆற்றுநீர் தான் குடிநீராக பயன்பட்டு வருகிறது. இதற்கிடையே, யானைக்கல் கீழ்பாலத்தில் வைகை ஆறு முழுவதுமாக ஆகாயத்தாமரை படர்ந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உள்ளிட்ட பூச்சிகளின் படையெடுப்பும் அதிகளவு உள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறை வைகையாற்றில் ஆகாய தாமரை ஆக்கிரமித்து வருகிறது. வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருப்பதிலும், அதனை பராமரிப்பதிலும் மதுரை மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினால் அந்த நேரத்தில் மட்டும் பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதில் மதுரை நகருக்கும் ஓடும் வைகை ஆற்றை பராமரிக்கும் முழு பொறுப்பும் மாநகராட்சிக்கு உள்ளது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளது.
அகலமான குழாய்கள்
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, யானைக்கல் தரைப்பாலத்தில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் துளைகள் அனைத்தும் அடைபட்டுள்ளது. இதனை அகற்றிவிட்டு தண்ணீர் செல்வதற்கு ஏற்ப பெரிய துளைகள் உள்ள குழாய்கள் பதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், வைகை ஆற்றில் கழிவுநீர் பல இடங்களில் கலக்கிறது. இது குறித்து மாநகராட்சிக்கு பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கழிவுநீரில் மட்டுமே ஆகாயதாமரை வளர்கிறது. இதனால் துர்நாற்றம் உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தண்ணீர் தேங்கி நிற்பதால் 3 மாதத்துக்கு ஒரு முறை அவற்றை அகற்ற வேண்டியுள்ளது. இந்த பணிகளில் கூட மாநகராட்சி ஒத்துழைப்பதில்லை.
எனவே வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். தரைப்பாலத்தில் உள்ள குழாய்களை அகற்றி விட்டு தண்ணீர் செல்வதற்கு ஏற்ப அகலமான குழாய்கள் பதிக்க வேண்டும். இதுவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகும் என்கின்றனர்.