ஆப்பிரிக்கன் காய்ச்சல் பரவல்: பன்றி பண்ணைகளில் அதிகாரிகள் கண்காணிப்பு
ஆப்பிரிக்கன் காய்ச்சல் பரவல் காரணமாக பன்றி பண்ணைகளில் அதிகாரிகள் கண்காணி்ப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆப்பிரிக்கன் காய்ச்சல் பரவல் காரணமாக ஏராளமான காட்டுப்பன்றிகள் இறந்துள்ளன. இதன் எதிரொலியாக தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள 17 பன்றி பண்ணைகள், கால்நடை பராமரிப்பு துறையினர் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பண்ணை உரிமையாளர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும், சந்தேகத்திற்குரிய வகையில் பன்றிகள் இறந்தாலும் உடனடியாக அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவரிடம் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர கால்நடை துறையை சேர்ந்த நோய் புலனாய்வு பிரிவினரும் கண்காணிப்பு பணியை மேற்கோண்டு வருகின்றனர். இதேபோல் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள கேரள மாநில எல்லைப்பகுதியான கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு சோதனைச்சாவடி வழியாக பன்றிகளை கொண்டுவரவும் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.