சூளகிரி அருகே 15 வயதில் கோபித்து சென்றவர் 22 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பினார்-பெற்றோர் இறந்ததை அறிந்து வேதனை
சூளகிரி:
சூளகிரி அருகே 15 வயதில் கோபித்து சென்றவர், 22 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பினார். அவர் பெற்றோர் இறந்ததை அறிந்து வேதனை அடைந்தார்.
பணி நீக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மருதாண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் காக்கியப்பா, சாதம்மா தம்பதி. இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் 2-வது மகனான சந்திரன் என்பவர், 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதனிடையே அவர் திடீரென பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால், குடும்பத்தினர் அவரை கண்டித்தனர். இதனால் கோபம் அடைந்த சந்திரன் கடந்த 2000-ம் ஆண்டில் தனது 15-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். மேலும் சூளகிரி போலீசில் புகார் அளித்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் மனவேதனை அடைந்தனர்.
வேதனை
இந்தநிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரன் தனது வீட்டுக்கு திரும்பினார். அவரை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த சகோதரர்கள், ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர். அப்போது சந்திரன் தந்தை, தாயை தேடினர். ஆனால் அவர்கள் வீட்டில் இல்லை. இதனால் அவர் தனது சகோதரர்களிடம் கேட்டபோது அவர்களின் பதிலால் கண் கலங்கினார். அவரது சகோதரர்கள், தந்தை காக்கியப்பா 2011-ம் ஆண்டிலும், தாய் சாதம்மா 2015-ம் ஆண்டிலும் இறந்ததாக தெரிவித்தனர்.
இதனைக்கேட்ட சந்திரன் கதறி அழுதார். மேலும் தந்தை, தாயை பார்க்க முடியவில்லையே என்று எண்ணி வேதனை அடைந்தார். பின்னர் கலங்கிய கண்களுடன் அங்கிருந்த பெற்றோரின் போட்டோவை தொட்டு வணங்கினார்.
உதாரணம்
இதுகுறித்து சந்திரன் கூறும்போது, வீட்டை விட்டு வெளியே சென்றபோது, பணம் சம்பாதித்து விட்டு தான் மீண்டும் வீட்டுக்கு வரவேண்டும் என்று எண்ணினேன். இதற்காக சென்னை சென்ற எனக்கு சரியான வேலை கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் திருமணமும் செய்யவில்லை. இதனால் இளமையை இழந்த நான், தற்போது 37-வது வயதில் பெற்றோரை பார்க்க வந்தேன். ஆனால் அவர்கள் இறந்தது வேதனை அளிக்கிறது என்றார்.
'கோபத்தில் நாம் எடுக்கும் முடிவு, வாழ்க்கையில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு சான்றாக, இளமை காலத்தையும், பெற்றோரையும் இழந்த சந்திரன் உதாராணமாக உள்ளார்'.