7 நாட்களுக்கு பிறகு நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
‘மாண்டஸ்’ புயல் கரையை கடந்ததால் 7 நாட்களுக்கு பிறகு நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
'மாண்டஸ்' புயல் கரையை கடந்ததால் 7 நாட்களுக்கு பிறகு நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
'மாண்டஸ்' புயல்
வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் கடந்த 4-ந்தேதி முதல் நாகை மாவட்டத்தில் உள்ள
25 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி மீன்வர்த்தக பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் 'மாண்டஸ்' புயல் கரையை கடந்தது. இதைதொடர்ந்து நாகை துறைமுகத்தில் ஏற்பட்ட 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று முன்தினம் இறக்கப்பட்டது.
மீன்பிடிக்க சென்றனர்
புயல் கரையை கடந்த பின்னர் கடல் சீற்றம் குறைந்து காணப்பட்டது. இதனால் மீன்வளத்துறையினர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கினர். மேலும் மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 7 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை நாகை மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
700 விசைப்படகுகள்
மாவட்டத்தில் இருந்து 700 விசைப்படகுகள், 3 ஆயிரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றது. அக்கரைப்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, நம்பியார் நகர், செருதூர், காமேஷ்வரம் விழுந்தமாவடி, ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அதிக அளவில் மீன் கிடைக்கும் என மகிழ்ச்சியில் சென்றுள்ளனர்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைதோறும் நாகை மீன் இறங்குதளத்தில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும். கடந்த 7 நாட்களாக நாகை மீனவர்கள் மீ்ன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் நேற்று நாகை மீன் இறங்கு தளம், பாரதி மீன்மார்க்கெட் ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மீ்ன்கள் வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.