70 ஆண்டுகளுக்கு பிறகு நான் பழைய மாணவனாக மாறிவிட்டேன்அமைச்சர் துரைமுருகன் நெகழ்ச்சி


70 ஆண்டுகளுக்கு பிறகு நான் பழைய மாணவனாக மாறிவிட்டேன்அமைச்சர் துரைமுருகன் நெகழ்ச்சி
x
தினத்தந்தி 13 Sept 2022 12:56 AM IST (Updated: 13 Sept 2022 8:35 AM IST)
t-max-icont-min-icon

70 ஆண்டுகளுக்கு பிறகு நான் பழைய மாணவனாக மாறிவிட்டேன் என காட்பாடி பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்

காட்பாடி

70 ஆண்டுகளுக்கு பிறகு நான் பழைய மாணவனாக மாறிவிட்டேன் என காட்பாடி பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் பிளஸ்-2 மாணவர்கள் 216 பேருக்கும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 273 மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

காட்பாடி அரசு பள்ளியில் நான் படித்தேன். அப்போது இந்த இடம் இல்லை. இப்போது மகளிர் பள்ளி உள்ள இடத்தில் தான் நான் அப்போது படித்தேன். உங்களுக்கு இப்போது இருப்பது போல விசாலமான இட வசதி அப்போது இல்லை. இங்கு மேல்மாடியில் உள்ள வகுப்பறைகளின் கதவுகளை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறினார்கள். இது வருத்தத்திற்குரிய விஷயம். வகுப்பறைகள் ஒழுகுகின்றன என கூறினார்கள். இவை சரி செய்யப்படும்.

நான் படித்த பள்ளிக்கு செய்யாமல் வேறு எந்த பள்ளிக்கு செய்ய போகிறேன். பொன்னை அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்ததாக கூறினார்கள். அதுபோல காட்பாடியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

70 ஆண்டுகளுக்குப் பிறகு...

பெண்கள் பள்ளியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், என் வாழ்நாளில் எத்தனையோ மேடைகள் ஏறி உள்ளேன். பல கல்லூரிகளில் பேசி உள்ளேன். இந்த இடத்திற்கு 70 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் போது மலரும் நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன. நான் 1952-ம் ஆண்டு காட்பாடி அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு நுழைவுத்தேர்வு எழுதும் போது பராசக்தி பட போஸ்டர் ஒட்டிய பிரசார வாகனம் வெளியில் சென்றது இன்னும் என் மனதில் நீங்காமல் உள்ளது. நான் கல்லூரிகள், சட்ட கல்லூரியில் படித்தாலும் இந்த மண்ணில் படித்தது தான் என் நெஞ்சில் அப்படியே நிற்கிறது. இந்த மண்ணில் படிக்கும் போது இருந்த குருநாதர்களை நான் மறக்க மாட்டேன். 70 ஆண்டுகளுக்குப் பிறகு நான் பழைய மாணவனாக மாறிவிட்டேன் என்றார்.

விழாவில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் எம்.சுனில்குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அன்பு, விமலா சீனிவாசன், சித்ரா லோகநாதன், ரவிக்குமார், சரவணன், தலைமை ஆசிரியர்கள் ஜோதீஸ்வரபிள்ளை, சரளா ஆசிரியர்கள் செ.நா. ஜனார்த்தனன், க.ராஜா, சச்சிதானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story