சண்டை போட்டுக்கொண்டு கீழே விழுந்ததில் ஆண் யானை பரிதாப சாவு
சென்னம்பட்டி வனப்பகுதியில் சண்டை போட்டுக்கொண்டு கீழே விழுந்ததில் ஆண் யானை பரிதாபமாக இறந்தது.
அம்மாபேட்டை
சென்னம்பட்டி வனப்பகுதியில் சண்டை போட்டுக்கொண்டு கீழே விழுந்ததில் ஆண் யானை பரிதாபமாக இறந்தது.
ரோந்து
அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் சிறுத்தை, யானை, கரடி போன்ற வனவிலங்குகள் காணப்படுகின்றன.
இந்த நிலையில் சென்னம்பட்டி வனச்சரகம், வட பர்கூர் காப்புக்காடு, உள்ளூர் தண்டா வனப்பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
ஆண் யானை
அப்போது அந்த பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்ததை வேட்டை தடுப்பு காவலர்கள் கண்டனர். உடனே அவர்கள் இதுகுறித்து வனச்சரகர் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, வனச்சரகர் ராஜா, 3 அரசு கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வனத்துறையினர் முன்னிலையில் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சண்டையால்...
இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், 'வனப்பகுதியில் யானைகள் சென்று கொண்டிருக்கும்போது அவைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. இந்த சண்டையில் கீழே விழுந்ததில் ஆண் யானை இறந்துவிட்டது. இறந்த ஆண் யானைக்கு 30 வயது இருக்கும்,' என்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அந்த பகுதியிலேயே யானையின் உடல் புதைக்கப்பட்டது. யானையின் தந்தம் வெட்டி எடுக்கப்பட்டு சென்னம்பட்டி வனச்சரக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.