தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 627 பள்ளிக் கூடங்கள் திறப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 627 பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டது. பள்ளிக்கூடத்துக்கு வந்த மாணவ , மாணவியரை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று 627 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. பள்ளிக்கூட வாசலில் மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பள்ளிக்கூடங்கள்
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் 1-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறப்பு தள்ளிப்போனது. அதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 12-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந் தேதியும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கின. இதற்காக பள்ளிக்கூட வளாகங்கள், வகுப்பறைகள் அனைத்தும் சுத்தம் செய்து வைக்கப்பட்டு இருந்தன. அதே போன்று அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
திறப்பு
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 122 அரசு நடுநிலைப் பள்ளிக்கூடங்கள், 177 அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள், 32 அரசு உயர்நிலைப்பள்ளி, 45 அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி, 56 அரசு மேல்நிலைப்பள்ளி, 89 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 91 மெட்ரிக் பள்ளிக்கூடங்கள், 15 சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள் ஆக மொத்தம் 627 பள்ளிக்கூடங்கள் நேற்று திறக்கப்பட்டன. நேற்று காலை முதல் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர்.
உற்சாக வரவேற்பு
அவர்களை ஆசிரியர்கள், ஆசிரியைகள் மகிழ்வோடு உற்சாகமாக வரவேற்றனர். பல பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், பூக்கள் வழங்கியும், பன்னீர் தெளித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு அரசின் இலவச பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பை முன்னிட்டு அனைத்து பள்ளிக்கூடங்களும் சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலையில் 627 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
நாளை தொடக்க பள்ளிகள் திறப்பு
மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கூடங்களுக்கு வந்தனர். அவர்களுக்கு இனிப்பு, பூக்கள் வழங்கியும் ஆசிரியர்கள் வரவேற்று உள்ளனர். சில பள்ளிக்கூடங்களில் விழா போன்று நடத்தி உற்சாகமாக வரவேற்று உள்ளனர். இதே போன்று தொடக்கப்பள்ளிகள் நாளை (புதன்கிழமை) திறக்கப்பட உள்ளன. சில தொடக்கப்பள்ளிகளில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்று கூறினார்.
கோவில்பட்டி
கோவில்பட்டி பகுதியில் நேற்று அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை திறக்கப்பட்டது.
இந்தவகையில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 2 ஆயிரத்து 100 மாணவிகள் நேற்று உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். மாணவிகளை தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமையில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அதிகாரி ஜெயபிரகாஷ் ராஜன் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு அரசு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார். மேலும், நேற்று 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வகுப்பு வரை புதிய மாணவிகள் சேர்க்கையும் நடந்தது. மதியம் வரை 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்புகளில் சேர்த்தனர்.