புதிய சட்டம் அமலுக்கு வந்தபின் 2 ஆயிரம் மோசடி பத்திரப்பதிவுகள் ரத்து -அமைச்சர் மூர்த்தி தகவல்


புதிய சட்டம் அமலுக்கு வந்தபின்  2 ஆயிரம் மோசடி பத்திரப்பதிவுகள் ரத்து -அமைச்சர் மூர்த்தி தகவல்
x

புதிய சட்டம் அமல்படுத்திய பிறகு, 2 ஆயிரம் மோசடி பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மதுரை


புதிய சட்டம் அமல்படுத்திய பிறகு, 2 ஆயிரம் மோசடி பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மண்டலங்கள் பிரிப்பு

மதுரை மண்டல பத்திரப்பதிவு, மதுரை மற்றும் ராமநாதபுரம் என 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. மேலும் காதக்கிணறு, செட்டிக்குளம், பொதும்பு, மேலூர் (கிழக்கு), சாமநத்தம் ஆகிய 5 புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை திறக்கும் நிகழ்ச்சி, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, பதிவுத்துறை தலைவர் சிவனருள் ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் அனீஷ் சேகர் முன்னிலை வகித்தார். அமைச்சர் மூர்த்தி புதிய அலுவலகங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மதுரை மண்டல பத்திரப்பதிவு துறையில் புதிதாக ராமநாதபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ராமநாதபுரம் மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி மதுரை மண்டலத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மூன்று 3 மாவட்டங்களுக்குட்பட்ட 102 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மண்டலத்தில் ராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 48 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்.

மோசடி

தமிழ்நாட்டில் 576 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2021-2022-ம் நிதியாண்டில் 29 லட்சத்து 98 ஆயிரத்து 48 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் அரசுக்கு ரூ.13 ஆயிரத்து 913 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்தாண்டில் கடந்த 27-ந் தேதி முடிய சுமார் 25 லட்சத்து 38 ஆயிரத்து 984 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, அரசுக்கு ரூ.12 ஆயிரத்து 538 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன், இந்தாண்டை ஒப்பிடும் போது ரூ.2 ஆயிரத்து 970 கோடி வருமானம் அதிகரித்து உள்ளது. மேலும் இந்த நிதியாண்டில் நடப்பு வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை ஆகிய துறைகளின் மூலம் தமிழக அரசுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலக எல்கைக்குள் அமையும் அனைத்து கிராமங்களும் ஒரே தாலுகாவில் கொண்டு வருவதற்காக பணிகள் நடந்து வருகின்றன. இந்தியாவிலேயே முதன் முறையாக போலி பத்திரங்களை ரத்து செய்வதற்கான சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை அந்தந்த மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்து வருகின்றனர். இந்த சட்டம் அமல்படுத்தியபிறகு, இதுவரை 2 ஆயிரம் போலி பத்திரப்பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story