கல்லணைக்கால்வாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள்
தஞ்சை கல்லணைக்கால்வாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை கல்லணைக்கால்வாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்லணைக்கால்வாய்
தஞ்சை மாவட்டம் காவிரி ஆறு பாயும் மாவட்டம் ஆகும். இந்த காவிரி ஆற்றில் இருந்து வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக்கால்வாய், குடமுருட்டி, அரசலாறு, பாமனியாறு, கண்ணனாறு, வீரசோழனாறு என 36-க்கும் மேற்பட்ட கிளை ஆறுகள் பிரிந்து செல்கின்றன.
இதில் கல்லணைக்கால்வாய் கல்லணையில் இருந்து பிரிந்து புதுக்கோட்டை மாவட்டம் வரை செல்கிறது. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 2½ லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஆகாயத்தாமரை
தஞ்சை மாநகரின் மையப்பகுதி வழியாக செல்லும் கல்லணைக்கால்வாய் புதுஆறு எனவும் அழைக்கப்படுகிறது. தற்போது தஞ்சை காந்திஜிசாலையில் இருந்து எம்.கே. மூப்பனார் சாலை பாலம் வரை உள்ள கல்லணைக்கால்வாயில் குறைந்த அளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
இந்த தண்ணீரில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதன் காரணமாக கல்லணைக்கால்வாயை ஆகாயத்தாமரை செடிகள் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளன.
துர்நாற்றம்
மேலும், ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் பலர் குப்பைகளை கல்லணைக்கால்வாய்க்குள் கொட்டி செல்கின்றனர். இவற்றால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் கல்லணைக்கால்வாய் கரையில் உள்ள ராஜராஜ சோழன் நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், பொதுமக்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். இதே நிலை நீடித்தால் ஆகாயத்தாமரைகள் மற்றும் குவிந்து கிடக்கும் குப்பைகளால் நடைபாதையை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.
அகற்ற வேண்டும்
அதுமட்டுமின்றி, அவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கல்லணைக்கால்வாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.