தண்ணீரே தெரியாத அளவுக்கு குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை


தண்ணீரே தெரியாத அளவுக்கு குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:15:10+05:30)

கொள்ளிடம் அருகே தண்ணீரே தெரியாத அளவுக்கு குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே தண்ணீரே தெரியாத அளவுக்கு குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஊராட்சிக்கு சொந்தமான குளம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தண்ணீர் பந்தல் கிராமம் உள்ளது. இங்கு கொள்ளிடத்தில் இருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே 5 ஏக்கர் பரப்பளவில் ஊராட்சிக்கு சொந்தமான பொதுக்குளம் உள்ளது.

இந்த பொதுக்குளத்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் பயன்படுத்தி வந்தனர்.

ஆக்கிரமிப்பு

இந்த குளத்திற்கு தண்ணீர் சென்று சேரும் வகையில் பிரதான பாசன வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால் இருந்தது. அதேபோல் இந்த குளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் வகையில் வடிகால் வாய்க்காலும் அமைந்துள்ளது. இந்த இரு வாய்க்கால்களும் ஆக்கிரமிக்கப்பட்டும், மூடப்பட்டும் உள்ளது. இந்த குளத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து செல்வதற்கு 200 மீட்டர் தூரம் சாலை வசதி உள்ளது.

இந்த குளத்தை பாதுகாக்கும் வகையிலும் தண்ணீரை தேக்கி பாதுகாக்கும் வகையிலும் பொதுமக்கள் இக்குளத்தில் இறங்கி நீராடி செல்வதற்கு வசதியாகவும் இந்த குளத்தை சுற்றி ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நான்கு படித்துறைகள் கட்டப்பட்டு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை

இந்த நிலையில் தற்போது இந்த குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. தண்ணீரே தெரியாத அளவுக்கு ஆகாயதாமரை செடிகள் குளத்தை ஆக்கிரமித்துள்ளன. இதனால் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் பாதைகள் அடைப்பட்டுள்ளன.

மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குளத்தில் கலந்து வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கைபிடித்தபடி செல்கின்றனர்.

நிலத்தடி நீரை சேமித்து வைப்பதற்கும் முக்கிய பங்கு வகித்து வந்த இந்த குளம் தற்போது சாக்கடை போல் இருப்பது வேதனை அளிக்கின்றது என்று அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொற்று நோய் பரவும் அபாயம்

இந்த குளத்தின் அருகே நடுநிலைப்பள்ளியும், மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. இந்த குளத்தில் கழிவு நீர் கலப்பதால் கொசு உற்பத்தியாகி அந்த பகுதி மக்களுக்கு, மாணவர்களுக்கு டெங்கு, சிக்கன்குனியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அகற்ற வேண்டும்

இதுகுறித்து தண்ணீர் பந்தல் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் கூறுகையில். ஆனைக்கரன் சத்திரம் ஊராட்சி தண்ணீர் பந்தல் கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது இந்த குளத்தில் வீடுகளில் இருந்து கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தண்ணீர் மாசடைந்துள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என்றார்.


Next Story