பஸ் நிறுத்தங்களில் தஞ்சமடையும் முதியவர்கள்
பஸ் நிறுத்தங்களில் தஞ்சமடையும் முதியவர்கள்
போடிப்பட்டி
திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் முதியவர்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில் வெளியூர்களிலிருந்து உறவினர்களே கூட்டி வந்து விட்டுச்செல்வதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆணி வேர்கள்
முதியவர்கள் என்பவர்கள் குடும்பத்தின் வழிகாட்டிகள், பாதுகாவலர்கள் மட்டுமல்லாமல் அவர்களே ஒட்டு மொத்த குடும்பத்தின் ஆணி வேர்கள் என்று புகழப்பட்டது ஒரு காலமாக இருந்தது.ஆனால் சமீப காலங்களாக முதியவர்களை சுமையாகக் கருதும் போக்கு அதிகரித்துள்ளது.'ஒண்ணு இந்த வீட்டிலே நான் இருக்கணும்..இல்லேனா உங்க அம்மா இருக்கணும்'என்று மிரட்டும் மருமகள்களுக்கு நமக்கும் ஒருநாள் வயதாகும் என்பது தெரியுமா என்பது தெரியவில்லை. பல குடும்பங்களில்'இந்த கிழம் எப்போ செத்துத் தொலையுமோ'என்ற ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் தாங்கிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் முதியவர்கள் ஒருபுறம் என்றால் விதியே என்று வீதிக்கு வரும் முதியவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள். இவர்கள் கால் போன போக்கில் போய் ஊர் ஊராக அலைந்து திரிந்து, கிடைப்பதைத் தின்று, கண்ட இடத்தில் தூங்கி நாட்களை நகர்த்துகிறார்கள். ஆனால் இதுபோன்று வீட்டை விட்டு வெளியேறியவர்கள் மட்டுமல்லாமல் தற்போது பல குடும்பங்களில் மகன், மகள் அல்லது உறவினர் பராமரிப்பில் இருக்கும் முதியவர்களை ஒரு கட்டத்தில் பராமரிக்க முடியாத (மனம் இல்லாத) நிலையில் பஸ்ஸிலோ ெரயிலிலோ அல்லது காரிலோ ஏற்றிச் சென்று நீண்ட தொலைவு கொண்டு விட்டு விட்டு வந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வட மாநிலத்தவர்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
முதியவர்கள் மட்டுமல்லாமல் மன நோயாளிகள், தீர்க்க முடியாத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற பலரும் குடும்பத்தினரால் மட்டுமல்லாமல், இந்த சமூகத்தாலும் கைவிடப்படும் அவலம் அரங்கேறுகிறது.இதுபோன்ற நிலையில் உள்ளவர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மட்டுமல்லாமல் மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு விட்டுச் செல்லும் அவல நிலையும் உள்ளது.அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பல வட மாநிலங்களைச் சேர்ந்த முதியவர்கள் மற்றும் மன நோயாளிகள் சுற்றித் திரிவதைக் காண முடிகிறது.ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள பஸ் நிறுத்தங்கள் தான் இதுபோன்ற ஆதரவற்றவர்ளுக்கு கைகொடுத்து வருகிறது.பஸ் நிறுத்தங்களில் தங்கிக் கொள்ளும் இதுபோன்றவர்களுக்கு பரிதாபப்பட்டு ஒருசிலர் உணவளிக்கின்றனர்.இதனால் அங்கேயே சாப்பிட்டு அங்கேயே தூங்குகின்றனர்.இதில் பலரும் கால்களில் சீழ் வடியும் புண்கள் மற்றும் பலவிதமான தொற்று நோய்களுடன் உள்ளனர்.அத்துடன் அந்த பகுதிக்கு அருகிலேயே இயற்கை உபாதைகளைக் கழிப்பதும் மீதமான உணவுகளை வீசி எறிவதும் அந்த பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவதற்குக் காரணமாகிறது.மேலும் அழுக்கு துணி மூட்டைகளை அங்கேயே அடுக்கி வைத்து குடியிருக்கின்றனர்.இதனால் பொதுமக்கள் பஸ் நிறுத்தங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
உள்ளாட்சி நிர்வாகங்கள்
சில நேரங்களில் போதிய உணவு மற்றும் பராமரிப்பு இல்லாமல் முதியவர்கள் அங்கேயே உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.அதுபோல மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் தங்கள் பிரச்சினை என்ன என்று சொல்ல முடியாத நிலையிலேயே உள்ளனர்.இவர்களில் ஒருசிலர் சற்று ஆக்ரோஷமாக காணப்படுகின்றனர்.அதுபோன்ற சூழ்நிலையில் இதுபோன்றவர்களால் மற்றவர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து ஏற்படக்கூடும்.மண்ணில் பிறந்த எந்த ஒரு மனிதனுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது.எனவே இதுபோன்ற கைவிடப்பட்ட மனிதர்களை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒவ்வொரு கிராமப்பகுதியிலும் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இதுபோன்ற கைவிடப்பட்ட நிலையில் உள்ளவர்களை மீட்டெடுத்து காப்பகங்கள் மூலம் பராமரிக்க வேண்டும்.அதுபோல நம்முடைய குழந்தைப் பருவத்தில் நம் பெற்றோர் நம் மீது காட்டிய அக்கறை, அரவணைப்பு போன்றவற்றை திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பாகவே பெற்றோரின் முதுமைப் பருவத்தைக் கருத வேண்டும்.தவறு செய்யாத மனிதர்கள் எவரும் இல்லை.ஆனால் அதற்கான தண்டனையாக கைவிடுதல் என்பது நிச்சயமாக இருக்கக் கூடாது.வறுமை நிலையால் பெற்றோரைப் பாராமரிக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு அரசு உதவி செய்ய முன்வர வேண்டும்.மொத்தத்தில் எந்த ஒரு ஜீவனும் கவனிக்க ஆளில்லாமல் அனாதையாக உயிரை விடக்கூடாது என்பதை அனைவரும் உறுதிமொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்'என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
---