மூதாட்டியை கொன்று 30 பவுன் நகை, ரூ.10 லட்சம் பணம் கொள்ளை


மூதாட்டியை கொன்று 30 பவுன் நகை, ரூ.10 லட்சம் பணம் கொள்ளை
x

மூதாட்டியை கொன்று 30 பவுன் நகை, ரூ.10 லட்சம் பணம் கொள்ளை

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

திருப்பூரில் பட்டப்பகலில் மர்ம ஆசாமிகள் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 30 பவுன் நகை, ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மூதாட்டி

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 70). இவருடைய மனைவி முத்துலட்சுமி (62). இவர்களுடைய மகன்கள் அருண்குமார், ஜீவானந்தம். இதில் அருண்குமாருக்கு திருமணமாகி குடும்பத்துடன் அதே பகுதியிலும், ஜீவானந்தம் குடும்பத்துடன் கோவையிலும் வசித்து வருகின்றனர். கோபால் அவருடைய மகன் அருண்குமாருடன் சேர்ந்து கதர் துண்டு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். மேலும் கோபாலுக்கு சொந்தமான கட்டிடத்தில் முதல் தளத்தில் 6 வீடுகள் மற்றும் கீழ் தளத்தில் 3 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். கீழ்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் கோபால் மனைவி முத்துலட்சுமியுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் கோபால் வழக்கம் போல் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு, மீண்டும் அருகில் உள்ள அவருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். பின்னர் மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது அவருடைய வீடு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் முத்துலட்சுமி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முத்துலட்சுமியை கீழே இறக்கினார். அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

கழுத்தை நெரித்துக்கொலை

இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில் துணை கமிஷனர் அபினவ்குமார், உதவி கமிஷனர்கள் அனில்குமார், நல்லசிவம், இன்ஸ்பெக்டர்கள் தாமோதரன், ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்து முத்துலட்சுமியின் உடலை பார்வையிட்டனர். அப்போது முத்துலட்சுமியின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது.

முத்துலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம ஆசாமிகள் அவருடைய வீட்டிற்கு வந்து அவரை துணியால் கழுத்தை நெரித்து கொன்று, உடலை மின்விசிறியில் தொங்க விட்டுள்ளனர்.

30 பவுன், ரூ.10 லட்சம் கொள்ளை

பின்னர் முத்துலட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலி உள்பட பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் ஹண்டர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அந்த ேமாப்பநாய் கொலை நடந்த வீட்டின் வளாகம் மற்றும் அங்கிருந்து வெளியே சென்று சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதன் பின்னர் போலீசார் முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

4 தனிப்படைகள் அமைப்பு

மேலும் கொலையாளிகள் தாங்கள் வந்து சென்ற தடயங்களை கண்டுபிடிக்க முடியாத வகையில் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். முத்துலட்சுமி வீட்டில் தினமும் தனியாக இருப்பதை நன்றாக தெரிந்த நபர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். 2 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. எனவே அந்த கட்டிடத்தின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாக இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டு வருகின்றனர். அந்த கட்டிடத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று, நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-------------------


Next Story