பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை


பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
x
தினத்தந்தி 16 May 2023 1:00 AM IST (Updated: 16 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

விடை எழுத ஆசிரியர்கள் உதவிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

ஊட்டி

விடை எழுத ஆசிரியர்கள் உதவிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

விடை எழுத உதவி

நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி பிளஸ்-2 கணித தேர்வு நடந்தது. அப்போது சில மாணவர்களுக்கு விடை எழுத, கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உதவியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலராக பணியாற்றிய சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்தனர்.

அறிக்கை

இதையடுத்து வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில், அந்த பள்ளியில் தேர்வு எழுதிய 34 மாணவர்கள் கணித பாடத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 2 மாணவர்கள் மட்டுமே முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், மற்ற மாணவர்கள் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டினர்.

அதன்பின்னர் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனியசாமி, கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள், அந்த பள்ளிக்கு சென்று 34 மாணவர்கள், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையை அனுப்பி வைத்தனர்.

2 நாட்களில் தீர்வு

இந்த விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் மேற்படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி நேற்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி நேரில் வந்து, பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இந்த சம்பவம் குறித்து சென்னை தேர்வு துறை இயக்ககம் விசாரணை நடத்தி வருகிறது. அடுத்த 2 நாட்களில் தீர்வு காணப்படும் என்றார். இதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story