விவசாய நிலத்திற்கான வன உரிமை ஆவணம் வழங்கும் விழா


விவசாய நிலத்திற்கான வன உரிமை ஆவணம் வழங்கும் விழா
x
திருப்பூர்


மலைவாழ் மக்களுக்கு விவசாய நிலத்திற்கான வன உரிமை ஆவணம் வழங்கும் விழா அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகிேயார் கலந்துகொண்டனர்.

வனஉரிமை உரிமை ஆவணம்

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்குள்ள குருமலை, மேல் குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, காட்டுப்பட்டி, கோடந்தூர், பொருப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சிவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கான அடிப்படை அத்தியாவசிய தேவைகளை வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து ஓரளவிற்கு செய்து தருகின்றனர்.

இந்த நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மலைவாழ் மக்களுக்கு விவசாய நிலத்திற்கான வனஉரிமை உரிமை ஆவணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று குலிப்பட்டி மலைவாழ் குடியிருப்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமைதாங்கினார்.

389 பேருக்கு...

இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 389 பேருக்கு விவசாயத்திற்கான வன உரிமை உரிமை ஆவணங்களை வழங்கினார்கள்.

அதன்படி மேல்குருமலை, ஆட்டுமலை பொருப்பாறு, தளிஞ்சிவயல், கரட்டுப்பதி, கருமுட்டி, பூச்சக் கொட்டாம்பாறை, குருமலை, குலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் குறித்தும் அமைச்சர்கள் மலைவாழ் மக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்கள்.மேலும் மலைவாழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் அமைச்சர்களிடம் அளித்தனர்.

இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன், பொருளாளர் முபாரக்அலி உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன், ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் உள்ளிட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை சார்ந்த அதிகாரிகள் மலைவாழ்மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story