விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட வேலை நாட்களை150நாட்களாக உயர்த்த வேண்டும். தினசரி கூலியான ரூ.281 -னுடன் மாநில அரசின் பங்காக ரூ.100சேர்த்து ரூ.381 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.வேலை தளத்திற்கு காலை 7 மணிக்கே வரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும். இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி, வேலை வாய்ப்பை பறிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை ஒன்றிய, அகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க உடுமலை ஒன்றிய பொருளாளர் சி.முத்துசாமி தலைமை தாங்கினார். கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் விளக்கவுரையாற்றினார்.
உடுமலை தாலுகா செயலாளர் ரங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உடுமலை ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், நகரசெயலாளர் கே.தெண்டபாணி, சி.ஐ.டி.யு. செயலாளர் ஜெகதீசன், ஐ.சுப்புலட்சுமி, சுதா சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.