பெயரளவுக்கு நடந்த பயிர்க்கடன் சிறப்பு முகாம்
மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் பயிர்க்கடன் தொடர்பான விவசாயிகளின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் நடந்த சிறப்பு முகாம் பெயரளவுக்கு நடத்தப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
குறைந்த விவசாயிகள்
திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகை திட்ட பயனாளிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்குதல் மற்றும் பயிர் காப்பீடு சிறப்பு முகாம் நடத்திட மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மடத்துக்குளம் விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் நடத்தப்பட வேண்டிய இந்த முகாம் பெயரளவுக்கு நடத்தப்பட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சிறப்பு முகாம் நடைபெறுவது குறித்து விவசாயிகளுக்கு நாளிதழ்கள் வாயிலாகவோ, சமூக ஊடகங்கள் மூலமாகவோ தகவல் தெரிவிப்பதில் வருவாய்த்துறையினர்ஆர்வம் காட்டவில்லை. இதனால் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே முகாமில் கலந்து கொண்டனர். மேலும் தாசில்தார் தலைமையில் நடத்தப்படும் இந்த சிறப்பு முகாமில் வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, முன்னோடி வங்கி மேலாளர், வங்கி பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு வங்கி செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
பயிர்க்கடன் சிக்கல்கள்
தற்போதைய நிலையில் பயிர்க்கடன் பெறுவதில் விவசாயிகள் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டிய வங்கி அதிகாரிகள் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இந்த முகாமில் கலந்து கொள்ளவில்லை. இதனால் பயிர்க்கடன் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருந்த சொற்ப விவசாயிகளும் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டது.
இந்த முகாமில் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அவர்களுடைய பங்களிப்பை முழுமையாக வழங்கியது மட்டுமே விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது. எனவே இதுபோன்ற முகாம்களை வெறும் கண்துடைப்பாக பெயரளவுக்கு நடத்தாமல் முழுமையாக நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மடத்துக்குளம் வட்டாரத்தில் தற்போது நெல் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் பயிர்க்காப்பீடு செய்வதற்கான தேதி கடந்த 15-ந் தேதியுடன் முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கிறார்கள். இதனால் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிரீமியம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.