உழவுப் பணிகளில் விவசாயிகள் தீவிரம்


உழவுப் பணிகளில் விவசாயிகள் தீவிரம்
x
திருப்பூர்


காங்கயம் பகுதிகளில் பரவலாக பெய்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் உழவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உழவுப்பணி தீவிரம்

காங்கயம், ஊதியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் முன்கூட்டியே மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் மானாவாரி பயிர்களான கொள்ளு, நரிப்பயறு, சோளம், மொச்சை, பாசிப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை விதைப்பு செய்து உழவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவற்றில் சோளம், நரிப்பயறு, கொள்ளு ஆகியவை அடுத்த போகம் விதைப்பு செய்ய விதைக்காக அறுவடை செய்தது போக, அப்படியே மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடுகளுக்கு உணவாக விடப்படுகிறது. சோளத்தட்டு அறுவடை செய்து சேமித்து வைத்துக் கொள்வது வழக்கம். நரிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை மேய்ச்சல் நிலங்களில் முற்றிய பின்னர் ஆடு, மாடுகளை அதனுள் மேய விடுவது வழக்கம்.

நல்ல மகசூல்

கடந்த ஒருவார காலமாகவே விதைப்பு, உழவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் நகர் பகுதியில் உள்ள தானிய மண்டிகளில் விதை தானிய வியாபாரம் களை கட்டியுள்ளது. நடப்பு சீசனில் நரிப்பயறு கிலோ ரூ.120, கொள்ளு ரூ.66, லைன் மஞ்சள் சோளம் ரூ.65, பாசிப்பயறு ரூ.105, தட்டைப்பயறு ரூ.98, உளுந்து ரூ.75 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு லைன் மஞ்சள் சோளம் மற்றும் கொள்ளு ஆகியவை கிலோவுக்கு ரூ.30 வரை அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து தானிய மண்டிகள் தரப்பில் கேட்டபோது, லைன் மஞ்சள் சோளம், கொள்ளு ஆகியவை அதிகளவில் அறுவடை செய்யப்படுவதில்லை. தீவனத்திற்காக விதைப்பு செய்யப்படுவதால் விளைந்தவுடன் அறுவடை செய்து வைக்கோல் போரில் சேமித்துவிடுகின்றனர். அல்லது காட்டில் நேரடியாக ஆடு, மாடுகளை மேயவிட்டு விடுகின்றனர். இதனாலேயே விலை அதிகரித்துள்ளது என்றனர்.

இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறும்போது: நடப்பாண்டு பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விதைப்பு செய்யப்பட்ட பின்னர் அடுத்த 10 நாட்களுக்கு பிறகு சீரான இடைவெளியில் பருவ மழை பெய்யுமானால் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் பெற்று விடலாம். இந்த ஆண்டு நிச்சயம் போதிய மழை பெய்யும் என்றனர்.


Next Story