காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம்
நெல் வயலில் அறுவடை முடிந்த பிறகு காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-
அமராவதி அணை
'உடுமலை பகுதியில் கல்லாபுரம், அமராவதி உள்ளிட்ட பகுதிகளில் அமராவதி அணைப்பாசனத்தில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. அணையின் நீர் இருப்பைப் பொறுத்து ஆண்டுக்கு ஒரு போகம் அல்லது 2 போகம் சாகுபடி நடைபெறுகிறது. இதனால் பெரும்பாலான நாட்களில் வயல்களில் எந்தவிதமான சாகுபடியும் இல்லாத நிலை உள்ளது. இத்தகைய சூழலில் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வகையில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் காய்கறிகள் சாகுபடி செய்ய வழிகாட்டல்கள் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் நெல் அறுவடை செய்த வயலில் தக்காளி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட எந்த வகையான காய்கறிகள் பயிர் செய்வதற்கும் ஏக்கருக்கு 8 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
இதுதவிர தர்காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம்பூசணி சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
பயிர் சுழற்சி
சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்க் குழாய்கள் அமைத்துக் கொடுக்கப்படுகிறது.
இவ்வாறு நெல் அறுவடை முடிந்த நிலத்தில் காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்யும்போது விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் வாய்ப்பு உருவாகிறது.
இதுதவிர பயிர் சுழற்சி முறை கடைபிடிக்கப்படுவதால் மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன் அடுத்த சாகுபடியின் போது பூச்சி, நோய் தாக்குதல் குறையும் வாய்ப்பு உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பயனடைய விரும்பும் விவசாயிகள் உடுமலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்' என்று அவர் கூறினார்.