மதுரை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலை தமிழக அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி 4 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


மதுரை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலை   தமிழக அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி 4 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x

மதுரை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி 4 கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்:-

மதுரை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி 4 கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூரில் நவக்கிரக கோவில்களில் ஒன்றாக கருதப்படும் சுக்கிரன் கோவில் உள்ளது. இந்த கோவில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கோவில் ஆகும்.

இந்த கோவிலை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று கஞ்சனூர், கோட்டூர், துகிலி, மணலூர் உள்ளிட்ட 4 கிராம மக்கள் கஞ்சனூர் சுக்கிரன் கோவில் முன்பு திரண்டு வந்து மதுரை ஆதீனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் திரள் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் கிராம மக்கள் அறிவித்தனர்.

குடமுழுக்கு பணிகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறும்போது, இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டது. ஆனால் இதுநாள் வரை குடமுழுக்கு நடத்துவதற்கான எந்தவித பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இந்த கோவில் சன்னிதானமாக மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த சாமிகள் இருந்து வந்த நிலையில் அவர் மரணமடைந்ததையடுத்து புதிய சன்னிதானமாக ஹரிஹர ஞானசம்பந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அரசே ஏற்று நடத்த வேண்டும்

இந்த கோவில் குத்தகை நிலுவைத்தொகை காரணமாக குத்தகைதாரர்கள் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் 40-க்கும் மேற்பட்ட குத்தகைதாரர்கள் மட்டும் இருந்து வரும் நிலையில் பொத்தாம் பொதுவாக நான்கு கிராம மக்கள் மீது தற்போதைய மதுரை ஆதீனம் வீண்பழி சுமத்துகிறார். இங்கு உள்ள கிராம மக்களை அடுத்த பிறவியில் வவ்வாலாக பிறக்க வேண்டும் என சாபம் விடுகிறார்.

எனவே கஞ்சனூர் கோவிலை ஆய்வு செய்து தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தெரிவித்தனர்.


Next Story