தனியார்மயமாக்குவதை கண்டித்து 1,000 இடங்களில் ஆர்ப்பாட்டம்


தனியார்மயமாக்குவதை கண்டித்து 1,000 இடங்களில் ஆர்ப்பாட்டம்
x

நுகர்பொருள் வாணிபக்கழகத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து 1,000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

திருவாரூர்

நுகர்பொருள் வாணிபக்கழகத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து 1,000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தனியார்மயம்

திருவாரூரில் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ‌.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ. உள்ளிட்ட நுகர்பொருள் வாணிபக்கழக தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நுகர்பொருள் வாணிபக்கழகம் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து விவசாயிகள்-தொழிலாளர்கள் பாதுகாப்பு மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு நுகர்பொருள் வாணிபக்கழக ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விவசாயிகள் ஒன்றிணைந்து போராடி தங்களுடைய நெல்லை கொள்முதல் செய்வதற்காக கொண்டு வந்த அமைப்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகமாகும். தற்போதைய தமிழக அரசு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பணிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடத்துக்கு டெண்டர் விடப்படுகிறது. அதுபோல் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. நவீன அரசி ஆலைகளில் இயக்குனர், உதவி இயக்குனர், மின் இணைப்பாளர் ஆகிய பணிகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசமான நடவடிக்கைகளை ஏற்க முடியாது. தமிழக அரசு இதனை கைவிட வேண்டும்.

எனவே நுகர்வோர் வாணிபக்கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி வருகிற செப்டம்பர் மாதம் 20-ந் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து தமிழக முழுவதும் 1,000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம்

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிறகும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில், ஒரு நாள் வேலை நிறுத்தமும், அதனை தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ., சி.ஐ.டி.யூ. மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன், மாநில உதவி பொதுச்செயலாளர் குமார், ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் இளவரி, மாநில துணை பொதுச்செயலாளர் பாண்டியன், விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி, விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story