அந்தியூரில் பரபரப்பு ரூ.70 லட்சம் கேட்டு முதியவர் காரில் கடத்தல்
அந்தியூரில் ரூ.70 லட்சம் கேட்டு முதியவரை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அந்தியூர்
அந்தியூரில் ரூ.70 லட்சம் கேட்டு முதியவரை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
முதியவர் கடத்தல்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஏ.எம்.எஸ்.காலனியை சேர்ந்தவர் அனிபா (வயது 65). பீடி சுற்றும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தனது வீடு அருகே பெரிய ஏரி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து திபுதிபுவென 6 பேர் கொண்ட கும்பல் இறங்கியது. பின்னர் அவர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அனிபாவை காரில் தூக்கி போட்டனர். அதன்பின்னர் காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
பணம் கேட்டு மிரட்டல்
அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அனிபாவின் மனைவிக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், உன் கணவர் அனிபாவை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.70 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து அனிபாவின் மகன் இப்ராஹிம் நேற்று காலை இதுபற்றி அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் விசாரணை நடத்தி வந்தார்.
மேலும் அனிபாவின் மனைவியிடம் பேசிய மர்மநபரின் செல்போன் சிக்னலை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது அது சேலம் பஸ் நிலையம் அருகே காட்டியது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு மாறுவேடத்தில் சென்று சுற்றி வந்தனர். அப்போது 2 பேர் சந்தேகப்படும் வகையில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தனர். இதனால் அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
கைது
விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குள்ள வீரம்பட்டி பகுதியை சேர்ந்த மோகன்குமார் (28), கருமலை கூடல் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (28) ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் அனிபாவை கடத்திய கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை அந்தியூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து மேலும் விசாரணை நடத்தினார்கள்.
பணம் இரட்டிப்பு மோசடி?
அதில் அவர்கள், கடத்தப்பட்ட அனிபா தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து பணம் இரட்டிப்பு தருவதாக கூறி மோசடி செய்ததாகவும், இதனால் ரூ.70 லட்சம் கேட்டு அவரை காரில் கடத்தியதாகவும் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அனிபா எங்கே கடத்தி வைக்கப்பட்டுள்ளார்? என்பது குறித்தும், கடத்திய மற்ற 4 பேர் குறித்தும் தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் 4 பேரையும் வலை வீசி தேடி வருகிறார்கள்.
அந்தியூரில் ரூ.70 லட்சம் கேட்டு முதியவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.