வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது
வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் (திங்கட்கிழமை) விடைபெறுகிறது. இனி வரும் நாட்களில் வெப்பம் குறையுமா என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
சென்னை,
கோடைகாலம் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கியது. ஆரம்பத்தில் வெயிலின் தாக்கம் காணப்பட்ட நிலையில், பின்னர் கோடை மழையால் வெப்பம் குறைந்து காணப்பட்டது. அதைத் தொடர்ந்து அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. கோடை காலத்தில் உக்கிரமான வெயில் இந்த காலத்தில்தான் பதிவாகும்.
அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இல்லாமலேயே இருந்தது. ஆனால் போகப் போக அதன் கோரத் தாண்டவத்தை காட்டத் தொடங்கியது. அதிலும் அக்னி நட்சத்திரத்தின் பிற்பகுதியில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. கடந்த வாரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் பதிவானது. இதுதான் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பப்பதிவாக தற்போது வரை இருந்துவருகிறது.
வெயிலின் தாக்கம் இருக்கும்
இந்த நிலையில் வாட்டி வதைத்துவந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் (திங்கட்கிழமை) விடைபெற உள்ளது. இதற்கு பிறகாவது வெயிலின் தாக்கம் குறையுமா என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
ஆனால் அக்னி நட்சத்திரம் விடைபெற்றாலும், தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்னும் ஒரு வார காலத்துக்கு வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று அதிகமாகவே இருக்கும் என்றும், இன்றும், நாளையும் (செவ்வாய்க்கிழமை) ஓரிரு இடங்களில் 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெயில் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வருகிற 31 மற்றும் 1-ந் தேதி தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
கனமழை
அதன்படி, 31-ந் தேதி (நாளை மறுதினம்) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், 1-ந் தேதி (வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் மிதமான மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, தமிழ்நாட்டில் வால்பாறை 8 செ.மீ., நத்தம் 5 செ.மீ., பாடலூர், ஆண்டிப்பட்டி, பெருஞ்சாணி அணை, ஏற்காடு தலா 4 செ.மீ., சின்கோனா, புத்தன் அணை, சின்னக்கல்லாறு, ஆனைமடுவு அணை தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.