"அக்னிபத்" திட்டம் பிரதமர் மோடி அவர்கள் நினைத்ததை விட எழுச்சி அடையும் - அண்ணாமலை


அக்னிபத் திட்டம் பிரதமர் மோடி அவர்கள் நினைத்ததை விட எழுச்சி அடையும் - அண்ணாமலை
x

மாமல்லபுரத்தில் நடைபெற்ற 8 வது யோகா நிகழ்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

மாமல்லபுரம்,

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் ஐ.நா. சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

இந்தநிலையில் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை யொட்டி நாட்டில் உள்ள முக்கியமான 75 இடங்களில் யோகான தினத்தின் போது பலதரப்பு மக்களும் கூட்டாக பங்கேற்கும் வகையில் இன்று யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற யோகாசன பயிற்சியில் பிரதமர் மோடி மக்களுடன் இணைந்து யோகாசன பயிற்சிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் பேசியதாவது,

பிரதமர் மோடி அவர்கள் யோகாவை ஒரு கலையாக எடுத்துச் செல்லாமல் மருத்துவமாக ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அவரது நோக்கத்துடன், இந்த 8வது யோகா தினத்தை வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் ஆன்மீக பணிக்காக இந்த கடற்கரை கோயிலை கட்ட பல்லவ மன்னர்கள் கால் பதித்த இந்த பூமியில் நடத்துகிறோம்.பல்லவ சாம்ராஜ்ய பூமியில் அமர்ந்து நான் யோகா செய்ததையும் பெருமையாக உணர்கிறேன் என்றார்.

பத்திரிக்கையாளர்கள் அ.தி.மு.க வினரின் ஒற்றை தலைமை குறித்து கருத்து கேட்டபோது,

அது அவர்களது கட்சி நிலைபாடு நாங்கள் தலையிடவோ கருத்து சொல்லவோ விரும்பவில்லை. எல்லாம் நாளை மறுநாள் சரியாகி விடும். அ.தி.மு.க உடனான கூட்டணி தொடரும். எங்களது கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கையும் கிராமம், கிராமமாக அதிகரித்து வருகிறது எங்களுக்கும் விரைவில் தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்றார்.

"அக்னிபத்" இராணுவ திட்டம் பற்றி கேட்டபோது,

எதிர் கட்சிகள் தவறாக கருத்தை மக்களிடம் தினிக்கிறார்கள். இளைஞர்களை முன்புபோல் பொய் சொல்லி யாரும் ஏமாற்ற முடியாது. அவர்கள் நன்றாக படித்து புரிந்து வருகிறார்கள். அதனால் "அக்னிபத்" திட்டம் மோடி அவர்கள் நினைத்ததை விட எழுச்சி அடையும், இராணுவமும் பலமாகும் என்றார்.


Next Story