மலைவாழ் கிராமங்களில் உழவுக்கு உபகரணங்கள் இல்லாததால் சாகுபடி பணிகள் பாதிப்பு
மலைவாழ் கிராமங்களில் உழவுக்கு உபகரணங்கள் இல்லாததால் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது
மலைவாழ் கிராமங்களில் உழவுக்கு உபகரணங்கள் இல்லாததால் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
மலைவாழ் மக்கள் குடியிருப்பு
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.
இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, ஆட்டு மழை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழானவயல், மஞ்சம்பட்டி, குருமலை, குளிப்பட்டி, மாவடப்பு, மேல் குருமலை, கருமுட்டி, முள்ளுப்பட்டி, பூச்ச கொட்டாம்பாறை, காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
இவர்களது பிரதான தொழில் விவசாயமாகும். இயற்கையோடு இணைந்து அதன் வளங்களைக் கொண்டு காலம் காலமாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயத்துக்கு பிரதானமாக உள்ள தண்ணீரை அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஆறுகள் அளித்து வருகிறது. அதைக்கொண்டு இஞ்சி, நெல், தக்காளி, மிளகாய், பீன்ஸ், தென்னை, வாழை, மஞ்சள், பாக்கு, கேழ்வரகு, சாமை, திணை, சோளம், உள்ளிட்ட பயிர்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் இயற்கை இடர்பாடுகள், வனவிலங்குகள் விவசாயத்துக்கு சவாலாக விளங்கினாலும் மலைவாழ் விவசாயிகள் மனம் தளராமல் போராடி சாகுபடி பணிகளை தொய்வின்றி செய்து வருகின்றனர்.
வேளாண் உபகரணங்கள்
வேளாண் தொழிலுக்கான உபகரணங்கள் இல்லாததால் விவசாயம் வனப்பகுதியில் அடியோடு முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-
வனப்பகுதியில் சமதள பரப்பு போன்று எளிதில் சாகுபடி பணியை மேற்கொள்ள இயலாது.
கரடு முரடான பகுதிகளை பல மாத உழைப்பை கொட்டி ஓரளவிற்கு சமன் செய்து உழவுக்கு தயார்படுத்த வேண்டும். அதன் பின்பே நிலத்தை பக்குவப்படுத்தி சாகுபடி பணிகளை தொடங்க இயலும். அதுவும் விவசாயத்தின் முக்கிய மூலதனமான உபகரணங்கள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் வனப்பகுதியில் நிலைமை தலைகீழாக உள்ளது.
சாகுபடி பணி
கால்நடை உள்ளவர்கள் மட்டுமே நிலங்களை உழுது சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றவர்கள் மாதக்கணக்கில் மண்வெட்டியை கொண்டு நிலம் அதன் ஈரப்பதத்தை இழப்பதற்குள் வெட்டி அதை பக்குவப்படுத்தி சாகுபடி தொடங்க வேண்டியது உள்ளது. இதனால் கால நேரமும் அதிகப்படியான உழைப்பும் வீணாவதுடன் பருவம் தவறி விடுவதால் பயிர்களில் விளைச்சல் குறைந்து பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றோம்.
மேலும் விவசாயம் ஏற்றம் காணும் வகையில் உழவுக்கு ஏற்ற உபகரணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை.
இதனால் விவசாயத் தொழில் ஈடுபடுவது சவாலான விஷயமாகவே உள்ளது. எனவே வேளாண்மை துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து மலைவாழ் கிராமங்களில் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக உழவுக்கு ஏற்ற உபகரணங்களை வழங்குவதற்கு முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.