குளிர்ந்த வானிலையால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் பெருகும் சூழல்
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் தற்போது நிலவி வரும் குளிர்ந்த வானிலையால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் பெருகும் சூழல் உள்ளதால் அதனை கட்டுப்படுத்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் தற்போது நிலவி வரும் குளிர்ந்த வானிலையால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் பெருகும் சூழல் உள்ளதால் அதனை கட்டுப்படுத்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளது.
பயிர் பாதுகாப்பு
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் தக்காளி, மிளகாய், பீட்ரூட், வெண்டை, கத்தரி உள்ளிட்ட காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதாலும், ஈரப்பதத்தாலும் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அதற்கேற்ப விலை ஏற்றம் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் பயிர் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
இதுகுறித்து குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-
'மழைக்குப் பின் நிலவி வரும் குளிர்ந்த வானிலை என்பது பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற பருவநிலையாக இருக்கும். தற்போதைய நிலையில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இலைகளின் அடியில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் வாய்ப்பு உள்ளது. இவை இலையில் உள்ள சாற்றை உறிஞ்சுவதோடு பூஞ்சணங்கள், வைரஸ், பாக்டீரியா, மைக்கோ பிளாஸ்மா போன்ற சில நோய்க் கிருமிகளையும் செடிகளுக்குள் செலுத்தி பலவிதமான நோய்களை உருவாக்குகின்றன. எனவே பூச்சி தாக்குதல் அறிகுறி தென்படாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இயற்கை எதிரிகள்
பொதுவாக பயிர் சாகுபடி செய்யும்போதே தட்டைப்பயறு, மக்காச்சோளம் போன்ற கவர்ச்சிப் பயிர்களை வரப்புப் பயிராக நடவு செய்து சாறு உறிஞ்சும் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். மேலும் இவற்றின் இயற்கை எதிரிகளான பொறி வண்டுகள் வளர்வதற்கேற்ற சூழலை உருவாக்கலாம். வெள்ளை ஈக்கள் தென்னையில் மட்டுமல்லாமல் பப்பாளி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட 300 விதமான பயிர்களில் சேதத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தும் போது அவற்றின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பலமடங்கு வீரியத்துடன் பெருகும் சூழல் உருவாகலாம்.
எனவே இயற்கை முறையில் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தி அவற்றை கவர்ந்து அழிக்கலாம். மேலும் அசுவினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதவீதம் ஏக்கருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். பூச்சிகளின் பாதிப்பு அதிக அளவில் தென்பட்டால் தோட்டக்கலைத் துறையினரின் பரிந்துரை பெற்று ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தலாம்'.
இவ்வாறு அவர் கூறினார்.