தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு
உடுமலையை அடுத்த பெதப்பம்பட்டி அருகே எஸ்.வல்லக்குண்டபுரம் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் குடிமங்கலம் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. ஒரு தோட்டத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் டெல்லி போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து மாநாடு தொடங்கியது.
மாநாட்டில் நல்லாறு- ஆனைமலையாறு அணை திட்டத்தை நிறைவேற்ற கோருதல், பி.ஏ.பி. தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது, உரித்த தேங்காயை கிலோ ஒன்றுக்கு ரூ.40 வழங்க வேண்டும், குடிமங்கலம் ஒன்றியம் உப்பாறு கரைப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும், சின்னவெங்காய சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், எஸ்.வல்லக்குண்டாபுரம் முதல் இலுப்பநகரம் வரை பழுதடைந்த சாலையை புதுப்பிக்க வேண்டும், குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் 18 பெண் விவசாயிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.