தென்னை விவசாயிகளுக்கு இனக்கவர்ச்சி பொறி வழங்கியதில் முறைகேடு
வேளாண்மைத்துறை மானியத்தில் தென்னை விவசாயிகளுக்கு இனக்கவர்ச்சி பொறி வழங்கியதில் முறைகேடு உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேளாண்மைத்துறை மானியத்தில் தென்னை விவசாயிகளுக்கு இனக்கவர்ச்சி பொறி வழங்கியதில் முறைகேடு உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முறைகேடு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மதுசூதனன் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 200 ஹெக்டேர் பரப்பளவில் 90 லட்சத்துக்கும் அதிகமான தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை மரங்களில் ஆறுமாதகாலமாக காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூண்டு வண்டுகளின் தாக்குதல் அதிகளவு உள்ளது. இந்த வண்டுகள் தென்னை குருத்தை துளையிட்டு சேதப்படுத்தி தென்னை மரங்கள் அடியோடு பட்டுப்போய்விடுகிறது. மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் உள்ள வேளாண்மைத்துறை மூலம் வண்டுகளை ஒழிக்க காண்டாமிருக இனக்கவர்ச்சி பொறி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஹெக்டேருக்கு 5 இனக்கவர்ச்சி பொறி வைக்க வேளாண்மைத்துறை பரிந்துரை செய்துள்ளனர். அரசு மானியத்தில் வேளாண்மை துறையினர், தனியார் நிறுவனத்திடம் இருந்து 1,500 இனக்கவர்ச்சி பொறிகளை தென்னை விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வழங்கி வருகின்றனர். இனக்கவர்ச்சி பொறி, மருந்துகளுடன் சேர்ந்து 50 சதவீதம் மானியம்போக மொத்தம் ரூ.952 நிர்ணயம் செய்து விற்பனை செய்கிறார்கள்.
ஆனால் தனியார் உரக்கடைகளில் பொறியை தவிர்த்து, மருந்துகள், பிளாஸ்டிக் பக்கெட் ஆகியவற்றின் விலை ரூ.375-க்கு கொடுக்கிறார்கள். வேளாண்மைத்துறை மூலம் தென்னை விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் என்றாலும் கூட, வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யும் விலையை விட ரூ.352 கூடுதலாக உள்ளது. இது மானியம் என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றுவதை போல் உள்ளது. வேளாண்மைத்துறை மூலமாக தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இனக்கவர்ச்சி பொறி, பாக்கெட் மருந்து ஆகியவை தரமற்றதாக உள்ளது. தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்து முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலி பப்பாளி விதை
அரசு தோட்டக்கலைத்துறை மூலம் மாவட்டத்தில் காய்கறி பழவகை விதைகள் விலையில்லாமல் வழங்கி வருகிறது. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தோட்டக்கலைத்துறை மூலமாக பப்பாளி விதை வழங்கியுள்ளனர். இந்த விதை தைவான் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் விதையாகும். இந்த ரகம் சுவை மற்றும் உற்பத்தி திறன் கொண்ட ரகமாக தெரிய வருகிறது.
இந்த நிறுவன விதையின் உண்மைத்தன்மையை அறிய கியூஆர் கோடு விதையின் பாக்கெட்டின் மேல் பதிவிட்டுள்ளது. அதன் மீது தேய்த்து ஸ்கேன் செய்தால் பாக்கெட்டில் உள்ள விதை சரியானது என தெரிவிப்பதுடன் விவசாயிகளின் விவரங்களையும் பதிவிடக்கோருகிறது. தனியார் கடைகளில் வாங்கிய பப்பாளி விதை பாக்கெட்டில் இந்த தகவல் இடம்பெறுகிறது.
உரிய நஷ்ட ஈடு
ஆனால் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை மூலமாக, மேற்கண்ட தைவான் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பப்பாளி விதைகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர். அந்த பாக்கெட் மேல் உள்ள கியூஆர் கோர்டை ஸ்கேன் செய்தால் ஸ்கேன் ஆவதே இல்லை. சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரிடம் கேட்டால் போலி விதை என்கிறார்கள்.
பப்பாளி விதையை ஏக்கருக்கு ரூ.1 லட்சம் செலவு செய்து பயிரிட்டு 5 மாதங்களுக்கு பிறகே பலன்தரும் என்பதால் போலி விதைகள் என்றால் விவசாயிகள் பெரும்பாதிப்பை சந்திப்பார்கள். எனவே இதுபோன்ற பப்பாளி விதைகளை முழுமையாக திரும்ப பெற்றும், ஏற்கனவே பயிர் செய்து பாதிப்படையும் விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கியும், வரும் காலத்தில் இதுபோன்ற நிகழ்வை தடுக்க வேண்டும்.
மக்காச்சோளத்துக்கு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாளவாடி குளத்தில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காண்டாமிருக வண்டு இனக்கவர்ச்சி பொறி வழங்கியதில் முறைகேடு உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.