தண்ணீர் இன்றி கருகும் விவசாய பயிர்கள்


கறம்பக்குடி அருகே மின்மாற்றியில் தாமிர கம்பிகள் திருடப்பட்டதால் மின்வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் தண்ணீர் இன்றி விவசாய பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

புதுக்கோட்டை

தாமிர கம்பிகள் திருட்டு

கறம்பக்குடி அருகே உள்ள விளாரிபட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 50 ஏக்கர் பரப்பளவில் நெல் மற்றும் சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. ஆழ்குழாய் மின்மோட்டார் மூலமே இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த மின்மோட்டார்களுக்கு ரெகுநாதபுரம் மின்வாரியத்திற்குட்பட்ட மின்மாற்றியில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விளாரிபட்டி மின்மாற்றியில் இருந்த 8 தாமிர கம்பிகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

கருகும் பயிர்கள்

தாமிர கம்பிகள் இன்றி மின்மாற்றி செயல்படாததால் விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் தடைபட்டது. புதிய தாமிர கம்பிகள் பொருத்தப்பட்டு மின்மாற்றி சீரமைக்கப்படும் என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் 15 நாட்களுக்கு மேலாகியும் மின்மாற்றி சீரமைக்கப்படவில்லை. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மின்மோட்டார்கள் இயங்காததால் தண்ணீர் இன்றி அப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளம் மற்றும் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மின்சாரம் வழங்க கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சோளம் மற்றும் நெற்பயிர்கள் கதிர் பிடிக்கும் தருவாயில் தொடர்ச்சியாக 15 நாள் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கிவிட்டன. பாடுபட்டு வளர்த்த பயிர்கள் மகசூல் தரும் வேளையில் பாழாவது வேதனையாக உள்ளது. எனவே விளாரிபட்டி மின்மாற்றியில் புதிய தாமிர கம்பிகளை பொருத்தி விவசாயத்திற்கு மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.


Next Story