வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்
ஜமீன் தேவர்குளத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.
நாலாட்டின்புத்தூர்:
கோவில்பட்டி வட்டாரத்தில் சிந்தலக்கரை, வெங்கடேசபுரம், கடலையூர், இளம்புவனம், சிதம்பராபுரம், பாண்டவர்மங்கலம், மூப்பன்பட்டி, சத்திரப்பட்டி, கொடுக்காம்பாறை, சின்னமலை குன்று, வடக்குபட்டி, பிச்சைதலைவன்பட்டி, சித்திரம் பட்டி மற்றும் ஜமீன் தேவர்குளம் ஊராட்சி பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.
இதில் 30 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பப்பட்டது. ஜமீன் தேவர்குளம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தவைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொடர்ந்து 300 பேருக்கு நெட்டை ரக தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் அனைத்து ஊராட்சிகளிலும் தென்னங்கன்றுகள் 600 எண்ணிக்கை வீதம் 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா இரண்டு வீதம் 100 சதவீத மானியத்திலும், வேளாண் கருவிகளான கடப்பாறை, மண்வெட்டி, இரும்புசட்டி, கதிர் அரிவாள் கொண்ட தொகுப்பு 50 சதவீத மானியத்திலும், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன் பெறலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.