விவசாய நிலங்கள், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது


விவசாய நிலங்கள், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது
x

விவசாய நிலங்கள், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது

திருச்சி

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சமலை பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. சராசரியாக 60 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. இதனால் பச்சமலையின் அடிவார பகுதிகளான கானப்பாடி, ஒட்டம்பட்டி, சோபனபுரம் ஆகிய பகுதிகளில் மலையில் இருந்து வரும் காட்டாறுகளில் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சோபனபுரத்தில் இருந்து டாப்செங்காட்டுப்பட்டிக்கு செல்லும் வனத்துறைக்கு சொந்தமான சாலை ஆபத்தான நிலையில் உள்ளது. பச்சமலை அடிவாரத்தில் வனத்துறை சோதனைச்சாவடியை ஒட்டியுள்ள குட்டையில் காட்டாற்று நீர் நிரம்பி மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டாற்று நீரால் கானப்பாடி- நரசிங்கபுரத்திற்கு இடையேயான தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் கானப்பாடியில் வசிக்கும் பொதுமக்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளதுடன், சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

கானப்பாடியில் இருந்து செல்லும் காட்டாற்று வெள்ளம் ஒட்டம்பட்டியில் உள்ள ஆட்டுப்பட்டியை மூழ்கடித்ததால், 12 ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் செங்கல் சூளையில் தண்ணீர் புகுந்ததால் ரூ.2 லட்சம் மதிப்பிலான செங்கல்கள் நாசமாகின. மேலும் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.

இதேபோல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் நேற்று பெய்த கனமழையால், திருச்சி மாவட்டத்தில் உள்ள புளியஞ்சோலை அய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அப்பகுதி வெள்ளக்காடாக மாறியது. இதனால் புளியஞ்சோலை வனப்பகுதி இந்த வாரம் முழுக்க தடை செய்யப்பட்ட பகுதியாக வன அலுவலர் ராஜாங்கம் தெரிவித்துள்ளார். மேலும் வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையில் வனவர் பிரியங்கா, வனக்காப்பாளர் மணிகண்டன் மற்றும் வன அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆறுகளில் செல்லும் அதிக நீரால் பி.மேட்டூரிலிருந்து செல்லும் பெரும்பாதை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மாராடியிலிருந்து கட்டப்பள்ளி, பாலகிருஷ்ணம்பட்டி செல்லும் சாலையில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story