கள்ளிமந்தையத்தில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது


கள்ளிமந்தையத்தில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது
x

கள்ளிமந்தையத்தில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை கொடுத்தனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் பெருமாள், செயலாளர் ராமசாமி ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் 3 மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்களில், ஒட்டன்சத்திரம் தாலுகாவில் கள்ளிமந்தையம், கொத்தயம், தேவத்தூர், சிக்கமநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களை விற்கவோ, வாங்கவோ முடியாதவகையில் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பூஜ்ஜியம் மதிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் சிப்காட் அமைக்க ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த போவதாக விவசாயிகளிடம் அச்சம் உள்ளது. இங்கு கண்வலி கிழங்கு உள்ளிட்ட மருத்துவ பயிர்கள், தக்காளி, முருங்கை மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்து விவசாயிகள் வாழ்கின்றனர். இதற்கு நிலத்தடி நீரை நம்பியே உள்ளனர்.

எனவே சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது. அதேநேரம் மாம்பழம், தக்காளி, கொய்யா பழங்களில் இருந்து சாறு தயாரிக்கும் சிறு, குறு தொழிற்சாலைகள் விவசாயமற்ற நிலங்களில் வருவதற்கு ஆட்சேபனை இல்லை. மேலும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் விவசாய நிலங்களுக்கான பூஜ்ஜியம் மதிப்பீடு தடையை அகற்ற வேண்டும்.

மேலும் நிலக்கோட்டையில் மல்லிகைப்பூ செடிகள் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. போலி மருந்து விற்பனையால் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் செலவு செய்தும் பூச்செடிகளை காப்பாற்ற முடியவில்லை. எனவ போலி மருந்து விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். அதேபோல் அய்யலூர் அருகே மலைப்பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அனுமதியின்றி மண் அள்ளிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.


Next Story