வேளாண் எந்திரங்கள் வழங்க வேண்டும்
வேளாண் எந்திரங்கள் வழங்க வேண்டும் என ராணிப்பேட்டையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குறைதீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பாரத பிரதமரின் சிறு, குறு வேளாண் சார்ந்த தொழில்களை முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் 10 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான எந்திரங்களை 35 சதவீத மானியத்தில் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
வேளாண் எந்திரங்கள்
கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது, சாகுபடி பரப்பை பிர்கா வாரியாக எடுக்க வேண்டும். வெள்ளம்பி கிராமத்தில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மோசூர், பரதராமியில் வாழை மரங்களுக்கான இழப்பீடு வழங்க வேண்டும். தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூலம் கழிவுகள் அகற்ற தக்க நடவடிகை எடுக்க மற்றும் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் சுற்றுசூழல் அலுவலர் மூலம் கூட்டம் நடத்த வேண்டும். கலைஞர் திட்டத்தின் வாயிலாக வேளாண் எந்திரங்கள் வழங்க வேண்டும்.
வேளாண்மை இணை இயக்குநர்:- தற்போது கலைஞர் திட்டத்தில் தென்னை கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் எந்திரங்கள், தார்பாய் மற்றும் வேளாண் கருவிகள் வழங்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், வேலாண்மை இணை இயக்குனர் வடலை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர்கள் சீனிராஜ், விஸ்வநாதன், தோட்டக்கலை லதா மகேஷ், முன்னோடி வங்கி மேலாளர் ஆலியம்மா ஆபிரஹாம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.