எந்திரமயமாக்கல்‌ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள்


எந்திரமயமாக்கல்‌ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் எந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண்மை எந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் எந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண்மை எந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வேளாண் எந்திரங்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கு முதல் தவணையாக ரூ.33‌‌ லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் 39 எந்திரங்கள் மற்றும் கருவிகளான டிராக்டர் 3, பவர்டில்லர் 25, களை எடுக்கும் கருவி 2, தெளிப்பான் 2 மற்றும் ரோட்டவேட்டர் 7 ஆகியவை மானியத்தில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில்‌ மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் அல்லது அரசு நிர்ணயிக்கும் தொகை மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அரசு நிர்ணயிக்கும் தொகை இதில் எது குறைந்த தொகையோ அதனை பின்னேற்பு மானியமாக விவசாயியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

பதிவு செய்ய வேண்டும்

மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் கணக்கிடப்பட்டு தனியே வழங்கப்படும். கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வாங்க விரும்பும் ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், சிறு விவசாயி சான்று, வங்கி கணக்கு விவரம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர் எனில் சாதி சான்றிதழ் நகல் ஆகிய ஆவணங்களுடன் வாலாஜாவில் உள்ள வேளாண் உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

முன்னுரிமை அடிப்படையில்

பதிவின்படி முன்னுரிமை அடிப்படையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

ஒரு நிதியாண்டில் ஒருவருக்கு தேவைப்படும் ஏதாவது 2 வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மட்டுமே விவசாயிகள் வாங்க முடியும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அதே வகையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்க முடியும்.

இந்த திட்டத்தின் மூலம் மானியம் பெற விருப்பமுள்ள விவசாயிகள் வாலாஜா வேளாண் உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story