கோபுராஜபுரத்தில் பருத்தி வயல்களில் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு
தரமற்ற விதைகளால் மகசூல் பாதிக்கப்பட்டதாக புகார் வந்ததால் கோபுராஜபுரத்தில் பருத்தி வயல்களில் வேளா ண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பாபநாசம்:
தரமற்ற விதைகளால் மகசூல் பாதிக்கப்பட்டதாக புகார் வந்ததால் கோபுராஜபுரத்தில் பருத்தி வயல்களில் வேளா ண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பருத்தி சாகுபடி
பாபநாசம் அருகே கோபுராஜபுரம் கிராமத்தில் 260 எக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்தி விதைகளை விவசாயிகள் பாபநாசத்தை சுற்றியுள்ள தனியார் நிறுவனங்களில் வாங்கி சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் தரமற்ற பருத்தி விதைகள் வழங்கியதால் பருத்தி செடியில் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
வயல்களில் அதிகாரிகள் ஆய்வு
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விவசாயிகள் புகார் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து பருத்தி சாகுபடி செய்த வயல்களுக்கு சென்று பருத்தி விதை வழங்கிய தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் வேப்பபட்டை பருத்தி ஆராய்ச்சி உதவி பேராசிரியர் ஆனந்தராஜ், விதை ஆய்வு உதவி இயக்குனர் விநாயகமூர்த்தி மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் பருத்தி வயல்களுக்கு சென்று செடிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின் போது பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன், கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், முன்ேனாடி விவசாயி நத்தம் சுப்பிரமணியன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.