விவசாயிகளுக்கு வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரம் மானிய விலையில் வழங்கப்படுகிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரம் மானிய விலையில் வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த எந்திரங்களை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மதிப்பு கூட்டும் எந்திரம்
தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் "அறுவடைக்குப் பின்சார் தொழில்நுட்ப மதிப்புக் கூட்டு எந்திரங்கள் மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு 20 மதிப்புக் கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.13 லட்சத்து 81 ஆயிரம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான சிறிய பருப்பு உடைக்கும் எந்திரம், மாவரைக்கும் எந்திரம், கால்நடைதீவனம் அரைக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழைநார் பிரித்தெடுக்கும் கருவி போன்றவை அனைத்து விவசாயிகளுக்கும் 40 சதவீதம் பின்னேற்பு மானியத்தில் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கலாம்
மானிய விலையில் மதிப்புக் கூட்டும் எந்திரங்கள் பெற்று பயனடைய விருப்பம் உள்ள விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர், ஸ்டேட் பாங்க் காலனி வடக்கு, தூத்துக்குடி (செல்போன் எண்: 9655708447) அலுவலகத்தையும், கோவில்பட்டி உதவி செயற் பொறியாளார் (செல்போன் எண்: 9443276371) அலுவலகத்தையும், திருச்செந்தூர் உதவி செயற்பொறியாளர் (செல்போன் எண்: 9443688032) அலுவலகத்தையும், மாவட்ட அளவில் தூத்துக்குடி செயற்பொறியாளர் (செல்போன் எண்: 9488406060) அலுவலகத்தையும் அணுகலாம். இது தொடர்பான விவரங்கள் பெறுவதற்கும் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கும் mis.aed.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.