மல்லியம் கிராமத்தில் வேளாண் குழுவினர் ஆய்வு
மல்லியம் கிராமத்தில் வேளாண் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது நெற்பயிரில் புகையான் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர்.
மல்லியம் கிராமத்தில் வேளாண் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது நெற்பயிரில் புகையான் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர்.
ஆய்வு
மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தலைமையிலான ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ராஜப்பன், ஆனந்தி, வேளாண்மை உதவி இயக்குனர்கள் வெற்றிவேலன், ராஜராஜன், சிவவீரபாண்டியன்(தரக்கட்டுப்பாடு) ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக மயிலாடுதுறை அருகே மல்லியம், சேத்திரபாலபுரம், பழையகூடலூர் பகுதிகளில் விளைநிலங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து சீர்காழி அருகே அகணி கிராமத்தில் நெற்பயிரில் புகையான் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வேளாண் குழுவினர் கூறியதாவது:-
சுவர்ணா சப்-1, ஆடுதுறை-51 மற்றும் பிபிடி5204 போன்ற நெல் ரகங்களில் பாதிப்பு காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட வயல்களில் புகையான்கள் வேர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறுகிறது. பின்னர் பழுப்பு நிறமாக மாறும். இது தத்துப்பூச்சி எரிப்பு எனப்படும். பாதிக்கப்பட்ட வயல்களில் ஆங்காங்கே வட்ட வட்டமாக புகைந்தது போல காணப்படுவது தாக்குதலின் அறிகுறியாகும் என்றனர்.
அறிவுரைகள்
இப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஆடுதுறை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அறிவுரைகள் வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் தழைச்சத்து உரங்களை அதிகமாக இடுவதை தவிர்க்க வேண்டும். 8 அடிக்கு 1 அடி இடைவெளி பட்டம் வீட்டு நெற்பயிரை நடவு செய்ய வேண்டும். புகையான் தாக்குதல் அதிகம் உள்ள இடங்களில் புகையான் பூச்சிக்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை நடவு செய்ய வேண்டும்.
நெல் நாற்றுகளை நெருக்கமாக நடுவதை தவிர்க்க வேண்டும். புகையான் பாதித்த பகுதிகளில் பட்டங்களுக்கு இடையே உள்ள நெற்குத்துக்களை நன்கு விலக்கிவிட்டு சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் பெற வசதி செய்ய வேண்டும். வயலில் நீர் தேங்காமல் உடன் நீரை வடியச்செய்ய வேண்டும்.
புகையானின் மறு உற்பத்தியை பெருக்கும் மீதைல்பாரத்தியான் மற்றும் பைரித்ராய்டு மருந்துகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.